ஒன்றுபடுங்கள் உலகத்தமிழர்களே

அன்பின் தமிழ் உறவுகளே…
இனமான ஈழத்தமிழருக்காக உலகத்தமிழர்களாகிய நாம் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், பொருளாதா அடிப்படையிலும்  நம் ஆற்றலுக்கு மீறிய விதத்தில் ஒன்று திரண்டு பலவகையில் ஈழத்தமிழரோடு இணைந்து போராடியபோதெல்லாம் உலக முதலாளிய வர்க்கமும், இன அழிப்புகளில் கைகோர்த்த இந்திய தேசியவாதிகளும், பொய்யே பரப்புரைச் செய்த ஊடகங்களும்,  நம்மை விடுதலைப்புலிகளின் அதாரவாளர்கள் என்று நமது சனநாயக  போராட்டங்களை திசைத்திருப்பியதோடு அல்லாமல், போராட்டம் குறித்து பேசியவர்களை எல்லாம் சிறைப்படுத்தியும், அச்சப்படுத்தியும், மன உளைச்சலை ஏற்படுத்தி நம்மை முடக்கிவைத்தது. எனவே நம் இனம் சிங்கள பேரினவாதத்தால் அழிக்கப்படும் நிலைக்கண்டும் தமிழகம் தழுவி நடைபெறவேண்டிய போராட்டங்கள் வெகு சிலவாக குறைந்தே நடைப்பெற்றதாலும், தமிழக தமிழராகிய நாம் பொங்கவேண்டிய நேரத்தில் பொருமை காத்ததாலும் நம் இனத்தின் பெரும்பகுதியை அழித்தும், எஞ்சியவர்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஊனப்படுத்தியும் இந்திய,சிங்கள தேசிய பேரினவாதம் எக்காளமிடுகிறது.
இவ்வளவு நாள் நாம் போராடியது அதிகாரவர்க்கம் சொல்வதுப்போல் பயங்கரவாதத்திற்கு ஆதரவானதல்ல உண்மையில் எம் மக்களுக்கும் அவர்தம் மண்ணின் விடுதலைக்காகவும்தான் என்பதை இன அழிப்பில் கைக்கோர்த்து நிற்கும் உலகளாவிய அரசியல், பொருளாதார பேரினவாதிகளின் தலையில் அடித்துச் சொல்லவேண்டுமெனில் முற்கம்பிகளிக்கிடையில் அடைக்கப்படிருக்கும் நம் இனத்தை மீட்க நாம் வீறுகொண்டு பொங்கவேண்டிய சரியான நேரம் இதுதான்.
எனவே எனதருமை தமிழினமே “இனிநாம் என்ன செய்யப்போகிறோம்? என்கிற ஒரு விடையறியாத வினா உலகத்தமிழராகிய நம்முன் உயர்ந்து நிற்கிறது. நாம் செய்யவேண்டியவை இவைதான் ஆங்காங்கே கூடுவோம், சிறு சிறு குழுக்களாக சென்று தமிழர் அனைவரிடத்திலும் நாம் செயல்பட வேண்டுமென்கிற உண்மையை புரியவைப்போம், கருத்தரங்குகள் நடத்தி கோரிக்கைகளுடன் உலகமனித உரிமை அமைப்புகளின் கதவுகளை தட்டுவோம். “உண்மையில் ஈழத்தமிழருக்கெதிரான பயங்கரவாதத்தினை நடத்துவது இந்திய,சிங்கள பேரினவாதம் தான்” என்பதை உரக்கச்சொல்வோம். முள் கம்பிகளுக்கு பின்னாலும், வதை முகாம்களிலும் அடைப்பட்டு தவிக்கும் நம் உறவுகளுக்கு அவர்களின் சொந்த வாழ்விடங்களுக்கு திருப்பி அனுப்ப ஆவனச்செய்வோம். திரண்டு எழுங்கள் தமிழர்களே.
ஈழத்தில்தானே பிரச்னை என்று நாம் ஒதுங்கிச் செல்வோமானால் அது எவ்வளவு மூடத்தனம் என்பதை நாம் விரைவில் எதிர்கொள்ள நேரிடும். ஆம் “சிங்களப்பேரினவாதத்துடன் இணைந்து சீனப்பேரினவாதமும்” நம் தமிழ்நாட்டை குறிவைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அப்படியே சீனா தமிழகம் வழியாக ஊடுருவினால் வழக்கம்போல் வடக்கு நம்மை கண்டுக்கொள்ளாமல் விடும் என்பதை உணர்க.ஆம் டெல்லிக்கு நாம் வாழ்வதைவிட தாழ்வதே மகிழ்ச்சி. எனவே பொதுநலத்தில் ஒரு சுயநலம் என்றாவது போராட களமிறங்குங்கள்.
Advertisements
Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சல்மான் என்கிற சாத்தான்

சல்மான் ரஷ்டி இது ஒரு மந்திரப்பெயர் என்று கூட சொல்லலாம், ஏனெனில் ஒரு நேரத்தில் எவர் உச்சரிக்கிறாரோ அவருக்கு தலைவலி முதல் தலையெடுப்பது வரை தொல்லைகள் வந்து சேரலாம் என்ற காலம் இருந்தது. ஈரான் தலைவர் திரு. ஆயத்துல்லா கொமேனி அறிவிப்பின்படி வழங்கப்பட்டிருந்த “பத்வா” விலக்கப்பட்டு தற்போது திரு. சல்மான் ரஷ்டியும் உலகமும் அமைதியடைந்திருக்கிறது.

 சமீபத்தில் கிழக்கு வெளியிடாக திரு. சொக்கன் எழுதிய “பத்வா முதல் பத்மா வரை” என்கிற சல்மான் ரஷ்டி பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகம் வாசிக்க நேர்ந்தது. சல்மான் ரஷ்டியின் புத்தகங்கள், வாழ்க்கை, வழக்கு என்று மிகவும் சுவையாகவும் சிக்கனமாகவும் நிறைய செய்திகளை தொகுத்திருந்தார். அதில் ஒரு சில தகவல்கள் மட்டும் திரும்ப திரும்ப வருவதாகபடுகிறது எனினும் சோர்வு தட்டாமல் செல்வதாலும், அவற்றை காலகட்டங்களுக்கேற்ப நினைவுகூறுவதாலும் அவசியமென்றே படுகிறது.

படித்து முடித்த நமக்கு மட்டுமல்ல சல்மானுக்கே அவர் எந்த நாட்டின் குடியுரிமை சட்டங்களுக்கு கட்டுப்பட்டவர் என்று விளங்காத ஒன்று. இந்தியாவில் பிறந்தவர்தான் என்றாலும் பாக்கிஸ்தான், இங்கிலாந்து.. என அவரும் அவர் குடும்பமும் புலம் பெயர்ந்துகொண்டே இருந்ததாக தெரிகிறது. பத்வா காலத்தின் போதுகூட அவர் பிறந்த மண்ணான இந்தியாவே அவருக்கு அடைக்கலம் தர மறுத்துவிட்டதாம். புத்தகத்தின் தகவல்கள் படி அவர் இங்லாந்தை சேர்ந்தவராகவே இருந்துவிட்டு போகட்டும் ஆனால் தற்போது நியுயார்க் நகரத்தில் குடியேறியிருப்பதாக தகவல்.சமீபத்தில் கூட இந்திய தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேட்டி ஒலிபரப்பபட்டது என் நினைக்கிறேன்.

சல்மான் ரஷ்டி என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது அவரது “சாத்தானின் வேதங்கள்” நாவலும் அதை தொடர்ந்த “பத்வா”வும் தான்.இதனால் ரஷ்டியைப் போலவே அவரது எழுத்துக்களும், அவரது வாழ்க்கையும் நிறைய மாற்றங்களை கண்டிருக்கிறது. வழக்கமான அவரது எழுத்துகள் நம்மூர் அம்புலிமாமா வகைதானே ஒழிய சிலவற்றை தவிர பெரும்பாலன கதைகள் புனைக்கதைகள் வகையை சேர்ந்தவைகளே. எனவே சல்மானின் எழுத்துகள் பெரும்பாலும் மக்களுக்கானதாகவோ சமூக புரட்சிக்கான இலக்கியமாகவோ அறியப்படவில்லை என்பதுபோல் தெரிகிறது.

சல்மான் ரஷ்டியின் சாத்தானின் வேதங்கள் தான் சர்ச்சைக்குள்ளானது என்றில்லை அவரது “நள்ளிரவு குழந்தைகள்” என்கிற நாவலில் அப்போதைய இந்திய பிரதமர் திருமதி. இந்திரா காந்தியை (அவசரநிலை பிரகடனத்தின் போது நடந்துகொண்டவற்றிற்காக) சர்வாதிகாரியாகவும், அவர் மகன் சஞ்சய் காந்தியையும் மறைமுகமாக அவமதித்ததாக வழக்கு தொடரப்பட்டு அதற்காக சல்மான் பகிரங்க மன்னிப்பும் கேட்டிருக்கிறார். இதேபோல் தனது “ஷேம்” என்ற நாவலில் பாக்கிஸ்தான் பிரதமர் திரு. ஜுல்பிகர் அலி பூட்டோவை
அவமதித்தாககூறி பாக்கிஸ்தானில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. எனவே இதற்கெல்லாம் சேர்த்து இந்தியாவும், பாக்கிஸ்தானும் “நள்ளிரவு குழந்தைகள்” நாவலின் படபிடிப்பிற்கு அனுமதிவழங்காமல் பழிதீர்த்துக்கொண்டன எனலாம். எனவே இதிலிருந்து ஏற்கனவே பல முறை சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறார் என்பது தெரியவருகிறது. அதுமட்டுமல்ல நாளடைவில் தனது வழக்கமான படைப்புகளில் இடையே சில சர்ச்சைகளை சேர்த்தால் புத்தகம் நன்றாக விற்கும் என்கிற வியாபார நோக்கத்தின் குறும்புகளும் சல்மானை விடவில்லை.

மயக்கவைக்கும் எழுத்துக்கள் என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு சிறந்த படைப்பாளிதான், இருப்பினும் அவரது சில படைப்புகள் ரொம்ப பொருமையாக செல்கின்றன எனவும், சரியில்லை எனவும் சக படைப்பாளிகள் மற்றும் விமர்சகர்களால் முணுமுணுக்கப்பட்டிருக்கிறது. இவற்றைப் போலவே ‘சாத்தானின் வேதங்களும்’ கண்டுக்கொள்ளாமல் விடப்பட்டிருந்தால் அவரின் மற்ற நாவல்கள் போல சுமாரான வரிசையில் சேர்ந்திருக்கக்கூடும். பத்வாவினால் ரஷ்டிக்கு தேவையில்லாமல் ஈரானே இலவச விளம்பரம் தந்து உலகம் முழுவதும் பேசபடும் எழுத்தாளராக்கிவிட்டது அல்லாமல் இந்நூற்றாண்டிலேயே தனது ஒரு நாவலுக்காக “மரணதண்டனை விதிக்கப்பட்ட எழுத்தாளர்” என்கிற வரலாறும் எழுதப்பட்டுவிட்டது.

ஏனெனில் ரஷ்டியின் மற்ற புத்தகங்கள் போலவே சாத்தானின் வேதங்களும் புனைவுதான் நிரம்பிவழிவதாக தெரிகிறது. இதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு கடுமைதான் எனவும், அப்படி தடைசெய்யப்படும் அளவிற்கோ, நாவல் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் மரணதண்டனை வழங்கபடும் அளவிற்கோ நாவல் முழுவதும் இஸ்லாமிய மதத்தை அவமதிப்பதாக இல்லையென்றெ இன்றலவும் சொல்லப்பட்டுவருகிறது. வழக்கம்போல் இந்த நாவலும் சிறந்த புனைவுக்கதையென்ற பரிசுகளுக்கும் பாராட்டுகளுக்கும் உட்படுத்தபட்டிருப்பதால் இக்காரணம் கொண்டே பத்வா விலக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதத்தோன்றுகிறது.

அது சரி இத்தனை நல்ல நாவலாக இருப்பின் பின் ஏன் மரணதண்டனை அளவிற்கு சர்ச்சைக்குள்ளானது என்பது ஒரு பெரிய விடையளிக்க யாரும் முன்வராத கேள்வி என்றுதான் கூறவேண்டும். சாத்தானின் கவிதைகளை பொருத்தவரையில் நாம் பத்வா மற்றும் ரஷ்டி என்கிற இருதரப்பிலும் நின்று பார்க்கவேண்டுமென்றே தோன்றுகிறது.

வழக்கம்போல் சல்மானின் நாவல் மூலப்பிரதி பெங்குவின் பதிப்பகத்திற்கு வழங்கப்பட்டதும்,
பதிபகத்தின் ஆலோசகரான எழுத்தாளர் திரு. குஷ்வந்த் சிங் அவர்களின் பார்வைக்கு
சென்றிருக்கிறது. அதைபடித்த அவர் “தயவுசெய்து இந்த நாவலை பிரசுரிக்க வேண்டாம்” எனவும், இது முஸ்லீம்களின் அதிருப்தியை பெற வாய்ப்புள்ளது என்று சொல்லியும் கூட அவரின் ஆலோசனை (பின் எதற்கு ஆலோசகர்)நிராகரிக்கப்பட்டு பெங்குவினின் ஒரு பிரிவான வைகிங் பதிப்பகத்தால் (எதிர்பார்த்துதானோ என்னவோ பெங்குவினில் பதிபிக்கவில்லை போலும்) பிரசுரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இச்செய்தி ரஷ்டிக்கும் தெரியப்படுத்தியிருக்கக்கூடும் அவரும் வேண்டுமென்றே
நிராகரித்திருக்கலாம், இதை வைத்து சர்ச்சை உண்டாக்கிய பகுதியானது தான் அறியாமலேயே கற்பனையில் வந்தது என்றும், அதை எவ்விதத்திலும் நீக்கப்பட தேவையில்லையெனவும்
(இதுநாள் வரை நீக்கப்படவில்லை) சர்ச்சைக்குபிறகு அவர் கூறியிருப்பது நம்பத்தகுந்தவையல்ல. மேலும் நாவலின் ஒட்டத்தில் அந்த புனித நூலில் சாத்தான் கற்பனையாக சிலவற்றை புகுத்துவதும், அது அந்த தூதருக்கு தெரிந்தே நடப்பதும், பின்னாலில் சாத்தானை கண்டித்து அந்த கவிதைகளை அவர் நீக்கிவிட்டாதாகவும் வரும் பகுதிகள், பின்னால் இந்த நாவல் குறித்து ஏதாவது சர்ச்சைக்குள்ளானால் அதுதான் சாத்தானின் கவிதைகள் நீக்கப்பட்டதாக நானே எழுதியிருக்கிறேனே என்றுகூறி தப்பித்துக்கொள்ளலாம் என்கிற நோக்கத்தில் பதிப்பிக்கப்பட்டதாகவே எண்ணத்தோன்றுகிறது.

அடுத்ததாக நாவல் வெளியிட்ட சிலதினங்கள் எந்த பிரச்னையோ பரபரப்போ இல்லாமல் சிறந்த புனைவு நாவல் என்று மட்டுமே பேசப்பட்டதாலும், திடீரென்று சீறிக்கிளம்பிய சர்ச்சைகளைப் பார்க்கும்போது. தாங்கள் எதிர்பார்த்த பரபரப்பு கிடைக்கவில்லையென்று பதிபகத்தாரே சில சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கக்கூடுமோவென சந்தேகிக்க வைத்திருக்கிறது.இன்னும் சற்று மேலே ஆய்வோமானால் ரஷ்டியின் மற்ற புத்தகங்களுக்கு பதிப்பகத்தார்கள் கொடுத்த விலையைவிட சாத்தானின் கவிதைகளுக்கு அதிகமான தொகையினை முன்பணமாகவே கொடுத்திருப்பதால், எப்படியும் சர்ச்சைக்குள்ளாகும் உண்டானால் நிறைய புத்தகங்கள் விற்று இலாபம் கொழிக்கலாம் என்கிற நோக்கமே முன்னிலை படுத்தப்பட்டு பதிபிக்கப்பட்டது என்றும் நம்பலாம்.

இனி பத்வா தரப்பிலிருந்து பார்த்தோமானால். சல்மான் ரஷ்டி மட்டுமல்ல உலகின் 100 விழுக்காடு எழுத்தாளர்கள் உண்மை நிகழ்வுகளை தங்கள் கற்பனையுடன் புனைந்துதான் எதுவும் எழுதுவர். இதில் சமூகசிந்தனைகள், அறிவியல் மற்றும் அரசியல் சமந்தமான விமர்சனங்கள் எழுதுபவர்கள் வேண்டுமானால் கற்பனை தவிர்த்து எழுதலாம். கற்பனை என்கிற போதே அதில் மாயாஜாலங்கள், துப்பறியும் மர்மங்கள் நிறைந்த கதைகள்தான் வாசகர்களிடம் எடுபடும் என்று எழுதுகிறவர்களும் உண்டு.

கற்பனைக்கு எல்லையில்லை நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் நுழைந்து காட்சிகளையும் திருப்பங்களையும் அள்ளிக்கொண்டுவரும். எழுத்தாளர்களின் கற்பனை மட்டுமல்ல எவரின் கற்பனைக்கும் எல்லைவகுக்க இயலாது. எப்போதும் கதைகளிலிருந்து நடைமுறைக்கு வரும்முன், நடைமுறையிலிருந்துதான் கதைகள் பிறக்கின்றன என்பதனை உணரவேண்டும்.விமர்சனம் என்கிறபோது இதுதான் இவ்வளவுதான் என்கிற கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டோ, முகம் பார்த்தோ, தகுதி பார்த்தோ செய்யப்பட்டால் அது விமர்சனமாகாது. மாறாக உண்மைக்கு விலக்காக துதிபாடுவதாவே அமையும். தவிர உலகில் அறியபடுகிற எதுவும், எவரும், எந்த மதமும் ஏன் அறிவியல் சம்மந்தப்பட்டவைக்கூட விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையல்ல.

மனிதர்களைவிட மதங்கள் பெருத்துவிட்ட உலகில்; பிறக்கும் போது எவரும் மதங்கள் தவிர்த்து பிறக்க இயலாது, பிறந்த பின் தன் பகுத்தறிவினால் தான் பிறந்த மதத்தை ஏற்றுக்கொள்வதும் வேறு மதத்திற்கு செல்வதும் அல்லது மதங்களே வேண்டாமென நாத்திகம் பேசுவதும் தனிமனித உரிமைகள். மேலும் எந்த மதமும் யாராலாவது விமர்சிக்கப்பட்டால் உடனே அதிலிருப்பவர்கள் வெளியேறிவிடுவதோ அல்லது யாராலாவது அங்கீகரிக்கப்பட்டால் உடனே கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்துவிடும் அளவிற்குகோ, மதங்கள்; நினைத்த மாத்திரத்தில் மாற்றிக்கொள்ளும் ஆடைகள் அல்ல. அப்படியிருப்பின் அதற்கு பெயர் ஒரு மதமே அல்ல. அதே நேரத்தில் அடுத்தவர் மதங்கள் பற்றி விமர்சனம் கூறவருபவர் தான் சார்ந்திருக்கும் மதம் தனது விமர்சனத்தின் எல்லைக்குள் சரியாக செல்கிறதாவென சுய விமர்சனம் செய்தபின்னறே அடுத்தவர் மதம் பற்றி கருத்துக் கூறபடவேண்டும்.

சாத்தானின் கவிதை நாவலை பொருத்தமட்டில் அதன் மீது வழங்கப்பட்ட பத்வாவினை ஏற்றுக்கொண்ட யாரும் முழுமையாக படிக்கவில்லையென்றே தெரிகிறது. திரு.கொமேனியிடம் கூட நாவல் முழுவதும் பிழையிருப்பதாகவே சொல்லப்பட்டுருக்கலாம். எனவே அந்நாவல் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் மரணதண்டனை என்பது சற்று அதிகப்படியானதுதானே ஒழிய அதற்கு கிடைத்த பரிசுகளும் பத்வா விலக்கி கொள்ளப்பட்டபின் நூலை வாசித்தவர்களிடமும் ஒரே மாதிரியான கருத்துக்களை வைத்து பார்க்கும் போது ஒரு சில அத்தியாயங்கள் தவிர அத்தனை பக்கங்களிலும் சர்ச்சை இல்லையென்பதே தெரிகிறது.

மேலும் அரபுநாடுகள் என்கிற கட்டமைப்பின் படி பார்த்தோமானால் ஒவ்வொரு அரபுநாட்டிற்கும் ஒரு சட்டம் (பல இஸ்லாமிய சட்டமல்ல) ஒவ்வொரு நாட்டின் உள் மாநிலங்களுக்கும் சில தனிசட்டங்கள் என பிரித்து ஆளப்படுவது உண்மை. எல்லாம் அரபுநாடுகள் தானே ஒழிய அனைத்திற்கும் பொதுவான, இறுதிதூதர் வழங்கிய சட்டம் நடைமுறையில் இல்லையென்பது அரபநாடுகளில் வாழும் என்போன்றவர்களுக்கு தெரியும். எல்லா மதங்களைப்போலவே முஸ்லீம்களும் தங்கள் சட்டங்களை சடங்குகளாகவே வைத்திருக்கின்றனர் என்று ஒரு நிகழ்வில் ஒப்புக்கொண்ட இஸ்லாமிய அறிஞர் ஒருவரின் கருத்து இப்போது நினைவிற்கு வருகிறது. எனவேதான் அரபுநாடுகள் தொடங்கி இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஈரான், இராக், பாலஸ்த்தீன், சூடான் போன்ற நாடுகளில் ஷியா, சன்னி, குர்த், போரி, என சிறு சிறு குழுக்களாக பிரிந்து, அவரவர் தங்கள் மதகுருமார்கள், முன்னோர்கள் சொல்வதன்படி தொழுகை, நோன்பு மற்றும் பலவித நேர்ச்சைகள் என ஒருவரிலிருந்து மற்றவர் மாறுபட்டு தங்களது வழிபாட்டு முறைகளை வைத்திருக்கின்றனர் என்பது தெரியும். இதில் ஷியாக்கள் சன்னி முஸ்லீம்களை தங்கள் பள்ளிவாசல்களுக்குள் அனுமதிக்கமாட்டார்கள் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை. மற்றவர்கள் எப்படியோ?

திரு.கொமேனி அவர்கள் இஸ்லாமிய மத சட்டங்கள் ஒழுங்காக கடைபிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்யும் ஒரு குழுவின் தலைவராக இருந்தவர். எனவே அந்த குழு உறுதியாக தான் சார்ந்த ஷியா அமைப்பினை மட்டுமே வழிநடத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. அப்படியெனில் அங்கேயே பத்வா குறித்தான முதல் விமர்சனம் தொடங்கிவிட்டது எனலாம். ஏனெனில் ஷியாக்களின் வழிபாடுகள் மற்ற பிரிவினருக்கு முற்றிலும் மாறுபட்டவையென்பது தெரியவருகிறது. அப்படியாயின் எந்த சட்டத்தின் அடிப்படையில் பத்வா வழங்கினார் அதை மற்ற முஸ்லீம்கள் எந்த சட்டத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டனர் என்கிற வினாக்கள் எழுகின்றன.

அப்படி அவர்சொன்னால் சரியெனில் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையிலிருந்து அவரின் எல்லா தீர்ப்புகளும் உலகில் உள்ள எல்லா முஸ்லீம்களாலும் ஏற்றுக்கொள்ளபடவேண்டும். வெரும் உணர்ச்சிவயபாட்டினால் எடுக்கப்படும் முடிவுகள் ஏற்றுக்கொள்ள படுமெனில் மதங்களுக்கென்ற சட்டங்கள் நடைமுறைபடுத்த இயலாது என்கிற நிலைதான் எழுகிறது.
உதாரணமாக சமீபத்தில் நிகழ்ந்தவையான பள்ளிவாசல்களில் குண்டுவெடிப்புகள் என்பதை சொல்லலாம். பாக்கிஸ்தான் முஸ்லீம் நாடுதான் என்றாலும் அங்கு இருக்கும் சிறு சிறு இன குழுக்களுக்குள் ஏற்பட்ட சர்ச்சையானது பள்ளிவாசல்களில் குண்டுவைப்பது அல்லது ஒருவரை ஒருவர் பள்ளிவாசல்களில் சுட்டுக்கொல்வது என நீண்டுக்கொண்டே செல்கிறது.இதுவே இந்தியாவில் நடக்குமெனில் அதற்கு மத சாயம் பூசப்பட்டு எதிர்தரப்பில் சில அப்பாவிகள் கொள்ளப்படலாம்.ஆனால் அதுவே பாக்கிஸ்தான் போன்ற முஸ்லீம்களின் நாட்டில் நடப்பதுதான் நமக்கு வியப்பினை அளிப்பது மட்டுமல்லாமல் முஸ்லீம்களின் இஸ்லாம் குறித்தான உள்வாங்கள் எந்த அளவிற்கு பலவீனப்பட்டிருக்கிறது என்பதும் தெரிகிறது.

எனவே தான் சாத்தானின் வேதங்களுக்காக சல்மான் ரஷ்டிக்கு கொடுக்கப்பட்ட பத்வாவை உலக முஸ்லீம்கள் எந்த கோட்பாட்டின் அடிப்படையில் கண்களை மூடிக்கொண்டு ஆதரித்தார்கள் என்பது கேள்விக்குள்ளாகிறது.ஏனெனில் ஈரானேக்கூட ஷியா என்கிற கோட்பாட்டையே பெரிதும் ஆதரிக்கிறது எனவே அதையே உலக முஸ்லீம்கள் கடைபிடிக்க வேண்டும் என்று நாளை ஏதாவது ஒரு பத்வா ஈரானால் வழங்கப்பட்டால் அதை உலக முஸ்லீகளில் மற்ற பிரிவினர் எதிர்ப்பார்களே ஒழிய ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதையெல்லாம் வைத்துப்பார்க்கையில் சல்மான்ரஷ்டிக்கு தேவையில்லாமல் பத்வா வழங்கி அவருக்கும் அவரின் புத்தகங்களுக்கும் இலவச விளம்பரம் வழங்கியிருக்க தேவையில்லை என்றே தோன்றுகிறது. மேலும் எதையும் கேள்விக்கேள் என்கிற தத்துவப்படி நாம் இரண்டையும் கேள்விக்கேட்கிறோம் என்பது மட்டுமல்லாமல் ஒன்றின்மேல் விமர்சனம் வைக்கப்படால் அதற்கு தகுந்த பதில் தரவேண்டுமே தவிர விமர்சனமே கூடாது என்கிற பாசிசமானது அதைகுறித்து மேலும் மேலும் தவறான கருத்துக்களை பரப்புபவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது.

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

பரியேறும் பெருமாள்

ஆயிரம் கண்ணாடி ஓடுகளின் மேல் மல்லாக்க கிடத்தி தர தரவென்று இழுத்துச் செல்வதுபோல் இரணமிகுந்த “வலியினை” மீண்டும் என் முதுகில் தடவி பார்த்துக்கொண்டேன். என் தகப்பன் என் கண் முன்னே நிர்வாணமாக்கப்பட்டு நடுத்தெருவில் ஓடுகையில். இந்திய கூட்டு மனசாட்சிக்கான மாட்சிமை தாங்கிய வலிகளை திணித்தே வளைந்த முதுகுகள் எங்களது என அந்த அப்பாவி தகப்பன் கையெடுத்து கும்பிட்டு ஓடும் காட்சி. 

கும்மிடுவது என்னெவோ அவனது கை தான் வெட்கி கூனி குறுகுவதோ இந்திய மதசார்புடைய மேட்டிமை மனிதர்களின் தலைகளும், சாதிய அடக்குமுறைகளுக்கெதிராக வாய்மூடி ஏட்டில் மட்டுமே கிடக்கும் சட்டங்களும் தான். அதில் ஒரு தலை என்னுடையதாகவும் இருக்கும் கையாலாகாத நிலைக்கு நானும் மெளன குற்றவாளிகாகவே நிற்கிறேன்.

“உன் கெளரவம் என்பது நான் உனக்கு போட்ட பிச்சை” என்கிற உரையாடலைவிட எதிர்வினை, எத்தனை அருவாக்கள் எடுத்து வீசினாலும், எத்தனை சட்டங்கள் போட்டு அடக்கினாலும் இயலாது.

சாதிய கெளரவம் என்பது தாழ்த்தப்பட்டு கிடப்பவரது அறவழி காக்கும் அமைதியால் மட்டுமே காக்கப்படுகிறதோடல்லாமல் மேல்சாதிய திமிரால் அடக்கப்பட்டு கிடக்கவில்லை. எங்கெல்லாம் சாது மிரல்கிறதோ அங்கெல்லாம் சாதியத்திமிர் மிரண்டு ஓடுகிறது என்பதனை வரலாறு நிரைய பதிவாகியிருக்கிறது.

ஒரு படத்தின் சில காட்சிகள் குறியீடாக வரலாம் முழுபடமே குறியீடாக வரமுடியுமா என்கிற கேள்வியை உடைத்தெரிந்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர்.  ”கருப்பி ஆணவக்கொலை” செய்யபடுகிறபோதும், இறுதிக்காட்சியில் ”ஒரு ஆணவநாய்” தற்கொலை செய்துக்கொள்ளுகிற போதும் இது வெறும் மூன்று மணிநேர சினிமா காட்சிகளின் குறியீடுகள் தான் என்று கடந்துவிட இயலாமல், சாதிய கொலைவெறியென்பது எப்படி நரம்பு மண்டலங்களில் புரையோடி கிடக்கிறது என்பதற்காக நாகரீக வளர்ச்சியின் அடையாளங்கள். ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டாலே அது காதல் தான் அவர்கள் ஓடத்தான் போகிறார்கள் அதுவும் இருவேறு சாதிகள் இங்கே எப்படி நண்பர்களாக கூட இணைய இயலும் என்கிற மனதில் படிந்திருக்கும் அழுக்கு சுவர்களை தகர்த்தெரிவதிலே அப்படியொரு நுணுக்கத்தை கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

சாதிய அழிவு என்பது எவன் கையில் அந்த கறை படிந்திருக்கிறதோ அதை அவன் அழித்துக் கொள்ளாதவரை தானே அழியாது அல்லது எதனாலும் அழிக்க முடியாது. கண்ணாடி குவளைக்கும் சிரட்டைக்கும் இடையேயான சாதிவெறியை சொல்வது கடந்தகால வலியெனில் ஒரே வகை கண்ணாடி குவளைகளில் சரிசமாக உட்கார்ந்து குடிக்கும் இருவேறு வகை தேனிரில் அப்பட்டமாக என்றும் இருக்கத்தான் செய்கிறது சாதிய வெறுப்புணர்வு என்பதை இதைவிட தெளிவாக எப்படி காட்ட இயலும்?.

பரியேறும் பெருமாள் என்பது வெறும் தாழ்த்தப்பட்டோர்களுக்கும் இடைசாதியர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமுமல்ல, தீர்வுமல்ல. தலித்தல்லாதோர் கூட்டங்களில் கலந்துக்கொள்ளும் அத்துணை சாதி, மத வெறியர்களுக்கும் பொதுவான பாடம்.

தன் சாதி பெண்களோடு பழகாத வரை தாழ்த்தப்பட்டவனை அரவணைப்பதாக காட்டிக்கொள்ளும் அய்யோக்கியர்கள் ஆணவக்கொலைகள் நடக்கும்போதெல்லாம் மனதுக்குள் கைதட்டிக்கொள்வதை உணர தயங்கவில்லை நாம். தங்கள் சாதி, மதம் சார்ந்த விமர்சனங்கள் எழாதவரை மெளனம் காக்கும் இவன்களைவிட குலசாமிக்கென்று கொலை செய்பவன் நேர்மையான சாதிவெறியனாகவே தெரிகிறான். மற்றவெனெல்லாம் மறைந்திருந்து நயவஞ்சக நாடகமாடும் நல்லவன்கள். அப்படிபட்ட நல்லவர்களால் தான் சொல்ல இயலும் “பரியேறும் பெருமாளில்” என்ன இருக்கிறது என்று. தன் சொந்த சாதிக்கெதிராக பேசாதவரை விமர்சகனை அறிவுசீவிகளாக அரவணைத்துக்கொள்வதில் வள்ளவர்கள் தான் இவ்வகையிலான சாதியை ஒழிக்க புறப்படுகிற நடுநிலை நாயகர்கள்.

”பரியேறும் பெருமாள்” தமிழ் சினிமாவின் மந்த புத்தியை கிளரி எதை சினிமாவாக்க வேண்டும் என்று ”தேவர்மகன்”களுக்கு கிடைத்திருக்கும் இந்நூற்றாண்டின் குட்டுகள். 

 

*கவிமதி*

துபாயிலிருந்து

==============================================

ஆயிரம் முட்டாள்களிடம் விவாதிப்பதை விட ஒரு புத்தகம் படிப்பது மேல்

—————————————————-

www.kavimathy.blogspot.com

www.kavimathy.wordpress.com

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

த.மு.மு.க

அன்பிற்கினிய தமுமுக தலைவர் மற்றும் நிருவாகத்தினர்களுக்கு
எனதருமை சகோதர்களே…
சாவின் விளிப்பில் நின்றுகொண்டிருக்கும் நம் ஈழத்தமிழ் இனத்தின் ஓலக்குரல் உங்கள் செவிகளில் எட்டவில்லையெனில் இம்மடலை தங்கள் அறிவுக்கண் கொண்டு வாசித்துவிட்டு, அதற்கு அடுத்தாற்போல் தமிழகத்தில் வாழும்  தமிழ் இஸ்லாமிய சமுதாயத்திற்கு தேவையான அடிப்படை  உரிமைக்கான  போராட்டத்தை தொடருங்கள். அதற்கு நானும் உங்களோடு முன்வரிசையில் நிற்கிறேன்.
கடந்த பல ஆண்டுகளாக நம் இனம் இலங்கை அரசால் கருவறுக்கப்படுவது தாங்கள் அறிந்ததே.
தற்போதைய சூழலில் மிகத்தீவிரமாக இன சுத்திகரிப்புக்கானா வேலையை நடத்திக்கொண்டிருக்கிறது
என்பதும் தாங்களுக்கு நான் உணர்த்த தேவையில்லை. இத்தகைய கருவறுக்கும் செயலுக்கு நம் இந்திய அரசும் தீவிரமாக செயல்பட்டு அதற்காக போர்கருவிகளும், இராணுவ வீரர்களையும் அனுப்பிவைப்பது மட்டுமின்றி, இந்திய மக்களின் எதிரிகள் பாக்கிஸ்தானும், சீனாவும் என நம் தலையில் மிளகாய் அரைத்துவிட்டு அங்கே நம் இனத்தை அழிக்கமட்டும் அதே எதிரிகளோடு கைக்கோர்த்துக்கொண்டு சிங்கள் காடையர்களின் ஈனச்செயல்களுக்கு உறுதுணை நின்று செயல்படுகிறது என்பதும் அறிந்ததே.
இத்தகைய ஈனச்செயலை கண்டித்து தமிழர்கள் மட்டுமின்றி உலகத்தில் இருக்கும்   மனிதாபிமானம் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றுக்கூடி தங்களால் இயன்ற அளவிற்கு தங்களது எதிர்ப்பினை பலவித போராட்டங்களால் காட்டிவருகின்ற சூழலில், நம் தமிழகத்திலோ நம் சகோதரர்கள் தங்களின் இன்னுயிரையும் துச்சமென மதித்து போராட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொள்கின்றனர்.
“இப்படி உலகமே ஈழத்தமிழர்களுக்காக இயங்கிக்கொண்டிருக்கையில் தங்களைபோன்ற இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து இதுவரை எவ்வித சலனமும் இல்லாமல் ஒருவித மெளனம் காக்கப்படுவது எனக்கு மிக்க வருத்தத்தை அளிக்கிறது”. ஈழப்பிரச்னை குறித்து தங்களுக்கு எந்தவிதமான பார்வையிருக்கிறது என்பது என் கேள்வியல்ல.
இந்தியாவிலோ இன்னபிற இடங்களிலோ இஸ்லாமிய சகோதரர்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளை கண்டித்து தனிப்போராட்டமாகவோ அல்லது தங்களைபோன்ற அமைப்புகளுடன் இணைந்தோ இன்றைக்கு ஈழத்திற்காக போராடும் அதே அமைப்பினர்கள் சகமனிதர்கள் என்கிறவிதத்தில்
இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருவதும் தாங்கள் அறிந்த ஒன்றே.
இன அழிப்பு என்பது சாதியை முன்னிருத்தியோ அல்லது ஒட்டுமொத்த இனத்தை முன்னிருத்தியோதான்
நடத்தப்படுகிறது. இது உலகமுழுவதும் பற்பல இனங்களுக்கெதிராக பற்பல வேறுபாகளுடன்
நடந்துக்கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் வன்முறை களமிரங்குகிறதோ அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சிசெய்ய
தமிழினம் என்றும் தயங்கியதேயில்லை.
இந்நிலையில் இசுலாமிய அமைப்புகளோ உலகின் ஏதாவது ஒரு மூலையில் சக இசுலாமியர்களுக்கு ஏதாவது என்றால் மட்டுமே போராட்டத்தில் இறங்குவது எவ்வகையில் நேர்மையாகும்.
இதனால் சக தமிழர்களிடமிருந்து, இலங்கைவாழ் இசுலாமிய அமைப்புகள் போல் தமிழக இசுலாமிய அமைப்புகளும் ஒரு ஒதுங்கிய நிலையை எடுக்கின்றார்களோ என்பது என் ஆதங்கம். அதை உறுதிசெவதுப்போல் தமிழக இசுலாமிய அமைப்புகளும்  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இதுநாள்வரை ஒரு கண்டன குரலும் எழுப்பவில்லை என்பது உண்மையென்றே எண்ணுகிறேன்.
எனவே தமிழ்நாட்டு இசுலாமியர்களின் சமூக வளர்ச்சியினை கருத்தில் கொண்டு புதியதாக “மனிதநேய மக்கள் கட்சி” தொடங்கிய தாங்கள், தங்கள் மனிதநேயத்தின் முதல்கட்டமாக ஈழப்பிரச்சைனை கையிலெடுத்து அங்கு அழிக்கப்படும் அப்பாவி தமிழர்களுக்காக குரல் கொடுத்த முதல் இஸ்லாமிய அமைப்பென்கிற வரிசையில் நிற்பதுடன். தங்களின் மனிதநேய மக்கள் கட்சி என்கிற பெயரையும் உறுதிசெய்வீர்கள் என நம்புகிறேன், அல்லது தாங்களும் அரசியலுக்காக தான் இந்த பெயர்வைத்தோம் என்கிற பாவணையில் மேலும் மேலும் மெளனம் காப்பது எதிர்கால அரசியல் சூழலுக்கு தகுந்ததல்ல,,,,
ஏனெனில் இன்றைய சூழல் அரசியலிலிருந்து இஸ்லாமிய அமைப்புகள் ஒதுங்குவதால் எதிர்காலத்தில் நீங்கள் ஓட்டுக்கேட்க போகும்போது மக்கள் உங்களை உதாசினப்படுத்த நிறைய வாய்ப்புகளை நீங்களே உறுவாக்குவதாக  எண்ணுகிறேன். நம் “மனிதநேய மக்கள் கட்சி” தேர்தல் களத்தில் இறங்கும்போது இப்போதிருக்கும் முஸ்லீம் விரோத கும்பல், அரசியல் கட்சிகள் (உ-ம். திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, இதர முஸ்லீம் லீக் கட்சிகள் என்று பட்டியலை நீட்டிக்கொண்டேபோகலாம்) இந்த ஒரு கரணியத்தை வைத்தே இவர்கள் எப்படி தமிழர்களிடத்தில் ஓட்டுகேட்கலாம் என கயமைதனமான பேச்சுக்களில் இறங்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது என் தொலைநோக்கு பார்வையில் தென்படுகிறது.
எனவே தங்களிடம் நான் அன்பாக வேண்டுவது சில….
  1. நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழருக்கான தமிழக மக்களின் ஆதரவு போராட்டங்களில் தமிழக முஸ்லீம்களை இணைந்துகொள்ள சொல்வது..
  2. இதற்காக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தனி பேரணி நடத்தி அப்பேரணியில்  ஈழத்தமிழருக்காக  தொடக்கத்திலிருந்து போராடும் அய்யா.பழ.நெடுமாறன், சுப.வீ, திருமாவளவன்,வைகோ   என முன்னணி தலைவர்களை அழைத்துப் பேசவைப்பது.
  3. ஈழத்தில் அமைதி வேண்டி தனி தொழுகையில் ஈடுபடுவது அல்லது ஒரு நாள் உண்ணாநிலை அரப்போர் நடத்துவது.. (இவை தமிழக மக்களால் கவனிக்கப்படும்).
  4. ஈழத்தமிழருக்காக நடத்தப்படும் அனைத்து கூட்டங்களிலும் நம் பிரதிநிதிகளை கலந்துக்கொள்ள செய்வது.
  5. ஈழத்தமிழர் விசயத்தில் தமிழகத்திலிருந்து எதிர்மறையாக செயல்படும் இலங்கை தூதரக அதிகாரி.திரு. அம்சா அவர்களை கொஞ்சம் அடக்கிவாசிக்க அறிவுறுத்துவது.(அம்சாவுக்கு, தான் தாக்கப்பட்டால் தமிழக இஸ்லாமிய அமைப்புகள் கேட்கும் என்கிற குருட்டு நம்பிக்கைக்கூட இருக்கலாம்)
இவற்றை என் கோரிக்கையாகவும் நம் மனிதநேய மக்கள் கட்சியின் எதிர்கால அரசியல் வளர்ச்சியை கவனத்தில் கொண்டும் எழுதியிருக்கிறேன். தாங்கள் வழக்கம்போல் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களை கலந்தாலோசித்து நல்ல முடிவெடுப்பீர்கள் எனவும் உலக அளவில் யாருக்கு எவ்விதமான அடக்குமுறை நடந்தாலும் மனிதநேய மக்கள் கட்சி களமிறங்கும் என்பதை வெளிப்படுத்திக்காட்ட வேண்டுகிறேன்.
தங்கள் மீது முழு நம்பிக்கையுடனும் தோழமையுடனும்
கவிமதி
துபாயிலிருந்து
==============================
வெட்டியெறிய ஆடுகள் அல்ல
நாம் வெள்ளாமை பெருக்கும் காடுகள்
———————————————————–
www.kavimathy.blogspot.com
Posted in பொதுவானவை, Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நான் விடுதலையடைந்து விட்டேன்

நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.

கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக்.

நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள். துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.நன்றி – http://porattamtn.wordpress.com/

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பெரியாருடன் ஒரு பயணம்

சாதி, மதம், மூட நம்பிக்கைகள், சடங்குகள், ஆணாதிக்கம், பொருளாதாரச் சுரண்டல் என அனைத்து வித இழிவுகளிலும் புதையுண்டு கிடந்த சமூகத்தை அவை அனைத்திலிருந்தும் மீட்டெடுத்து தன்மதிப்பு, சகோதரத்துவம், சமத்துவமுடைய ஒரு சமூகமாக மாற்ற தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த ஒரு மனிதர் பெரியார். தனது 95 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பணியில் ஈடுபட்டிருந்தவர் அவர்.

ஈ.வெ.ராமசாமி நாயக்கராக பொது வாழ்வில் நுழைந்து, அனைவராலும் வேறுபாடின்றி ‘பெரியார்’ என்று ஏற்றுக் கொள்ளப்படும் நிலைக்கு அவர் உயர்ந்தது ஓரிரவில் நடந்த மாயம் அல்ல.

periyar_403ஆதிக்க சாதியை சேர்ந்ததாக அறியப்பட்ட ஒரு குடும்பத்தில் ஆணாகப் பிறந்து தன் நேர்மையான பார்வையாலும் சுயசிந்தனையாலும் சாதி ஆதிக்கத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் எதிராக இறுதி வரை அவர் உறுதியாக நின்று போராடினார் எனில் அவர் கடந்து வந்த பாதை நிச்சயம் அத்தனை எளிமையானதாக இருந்திருக்க முடியாது. இன்றைய சமூகத்தில் எளிதாக உள்வாங்கப்படுகிற எத்தனையோ முற்போக்கான செயல்களுக்கு வித்திட்டவர் அவரே. இன்றளவிலும் சமூகத்தால் சகித்துக் கொள்ள முடியாத முற்போக்கான சிந்தனைகளை ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பே பழமையில் ஊறிப் போன அன்றைய சமூகத்தின் முன் துணிச்சலுடன் வைத்தவரும் அவரே.

பெரியார் ஒரு சுய சிந்தனையாளர் மட்டுமல்ல; இன்று இச்சமூகம் ஓரளவேனும் சுயசிந்தனையும் சுயமரியாதையும் உள்ள ஒரு சமூகமாக வளர்ச்சிப் பெற்றிருக்கிறது எனில் அதற்கு அவரது அயராத உழைப்பே முக்கிய காரணம்.

தனது சிந்தனைகளை அவர் பகிரங்கப்படுத்தியதும், பிரச்சாரம் செய்ததும் அதிலிருந்து பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும் இழப்புகளையுமே அவர் சந்தித்தார்.

பெரியாரின் இந்த நெடும்பயணம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமான பக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும் வாய்ப்பாகவே பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் குடி அரசு தொகுப்பு விளங்குகிறது. இதுவும் பெரியாரின் வாழ்க்கை வரலாறுதான். ஆனால் சம்பவ‌ங்களால் கோர்க்கப்பட்ட வரலாறு அல்ல; கருத்துக்களால் கோர்க்கப்பட்ட வரலாறு.

அந்த வரலாற்றைத் தொகுத்து 1925 முதல் 1938 வரையிலான குடி அரசு இதழ்களை 27 தொகுதிகளாக வெளியிட்டு ஒரு பெரும் பணியை பெரியார் திராவிடர் கழகம் செவ்வனே செய்து முடித்து விட்டது. அதை மக்களிடம் கொண்டு செல்லும் பணி பெரியார் திராவிடர் கழகத்திற்கு மட்டுமே உரியதல்ல. அந்தப் பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. ஏனெனில் பெரியார் மக்களுக்கு உரியவரே அன்றி எந்த ஒரு தனி கட்சிக்கு மட்டும் உரியவரல்ல. இதனை வலியுறுத்தியே பெரியார் திராவிடர் கழகம் பெரும் சட்டப் போராட்டத்தை நடத்தி இந்நூல்களை வெளிக் கொணர்ந்துள்ளது.

வெறும் நோக்கு நூலாகவோ, அலங்காரமாக அடுக்கி வைக்கவோ அல்லது இதன் மூலம் பணம் சம்பாதிக்கவோ இந்நூல்கள் வெளியிடப்படவில்லை. இன்றைய சமூகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள சாதி, மத இழிவுகளை ஒழிக்க மீண்டும் மீண்டும் பெரியார் தேவைப்படுகிறார் என்ற பேருண்மையை உணர்ந்து இன்றைய தலைமுறையினருக்கு அவரை, அவரது கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன; இலவசமாக இணையத்தில் தரப்பட்டுள்ளன.

10,000 பக்கங்களுக்கு மேலாக இருக்கக் கூடிய குடிஅரசு தொகுப்புகள் முழுவதையும் படிக்க பலருக்கு மலைப்பாகத் தோன்றக் கூடும். அந்த பணியை எளிதாக்கவே கீற்று ‘பெரியாருடன் ஒரு பயணம்’ நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐந்து தோழர்கள் நம்மை பெரியாருடன் பயணிக்க வைக்க இருக்கின்றனர். சாதி, மதம், பாலினம், வறுமை என அனைத்துவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடிய பெரியாருடனான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லக் கூடியவர்களாக அந்த ஒடுக்குமுறைகளுக்கு ஆளான சமூகத்தின் தோழர்களே வருகின்றனர்.

தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் அனைவரையும் குழந்தை போல நேசித்த அந்த கிழவனின் கைபிடித்து பயணிக்க வாருங்கள் தோழர்களே!

பெரியாருடன் ஒரு பயணம்
(1925 -‍ 1938 குடிஅரசு தொகுப்புகளின் வழியே)

நாள்: 18.09.2010, சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை

வரவேற்புரை: பாஸ்கர், கீற்று ஆசிரியர் குழு

குடிஅரசு இதழ் தொகுப்பு:

1925 -‍ 1926: ச.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
1927 ‍- 1929: எழுத்தாளர் ஓவியா
1930 – 1932: எழுத்தாளர் அழகிய பெரியவன்
1933 – 1935: எழுத்தாளர் பூங்குழலி
1936 – 1938: பேராசிரியர் ஹாஜா கனி, பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

ரிவோல்ட் ஆங்கில இதழ் தொகுப்பு: விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்புரை: கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

நன்றியுரை: பிரபாகரன், கீற்று ஆசிரியர் குழு

அனைவரும் வருக!!

தொடர்புக்கு: பாஸ்கர் – 9884499357

Posted in அறிவிப்புகள் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

தமிழம் வலை. www.thamizham.net

தமிழம்.வலை ( http://www.thamizham.net ) 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1. தமிழ்ப் பேழை/2. சிற்றிதழ்கள்/3. கல்வி/4. நாள் ஒரு நூல்.

தமிழ்ப் பேழையில் இருப்பவை…

குழந்தைகளுக்கான நல்ல தமிழ்ப் பெயர்கள் (30,000 பெயர்கள்), தமிழ் வளர்க்கப் பாடுபட்ட தமிழர்களின் படங்கள் (313 படங்கள்), தமிழரின் பெருமைமிகு படைப்பாக்கங்கள் (நிகண்டு, புறநானூறு பாடல்கள்), தமிழியமான இசைப்பாடல்கள் (45 இசைப் பாடல்கள்) (Real Player ல் கேட்கவும்), எமக்கு வந்த நூல்களின் அறிமுகம் (80 க்கு மேற்பட்ட நூல்கள்), சிறப்பான புகைப்படங்கள் (100 க்கு மேற்பட்டவை) , ஓவியங்கள் (10 ஓவியங்கள்), தமிழுக்கான கணினி வரலாற்றுப் பதிவுகள் (30க்கு மேற்பட்டவை), வியப்பிற்குரிய அரிய பதிவுகள் (35 க்கு மேற்பட்டவை).

சிற்றிதழ்கள் பகுதியில் இருப்பவை…

பழைய புதிய சிற்றிதழ்களின் பட்டியல் (1903 ஆம் ஆண்டு முதல்), சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழ் (2003 லிருந்து தமிழம் வலையில் வலையேற்றியவை), சுவைத்த பக்கங்கள் (2003 லிருந்து தமிழம் வலையில் வலையேற்றியவை), தற்பொழுது வருகிற சிற்றிதழ்களின் முகவரிகள் (100க்கு மேற்பட்டவை), சிற்றிதழாளர்கள் பட்டியல் (60 இதழாளர்கள் படங்கள், குறிப்பு), தமிழம் வலை நூலகத்தில் (அ முதல் வி வரையுள்ள இதழ்களின் பெயர்பட்டியல்), விரும்பியபோது வருகிற வெளியீடுகள் (சமகாலப் பதிவான 8 வெளியீடுகள், பாடல்கள்).

கல்வியில் இருப்பவை…

தமிழ் கற்பிக்கிற இறுவட்டு (வலையிறக்கி unzip செய்து தமிழ் கற்கலாம்), பள்ளிகளில் தொங்கவிடுகிற எழுத்து அட்டை (ஆங்கில விளக்கத்துடன்), படித்தல் திறன் வளர்த்துதற்கான 32 அட்டைகள் (தமிழை 3 மாதங்களில் கற்கலாம்), அரிய கல்வி ஆராய்ச்சிகள் (90 தலைப்புகளில் கல்வி பற்றிய ஆராய்ச்சிகள்), தமிழ்க் கல்விக்கான படவடிவக் கோப்புகள் (30 கல்வி காட்டும் கோப்புகள்), கல்வி வினாக்கள் / விடைகள் (2003 லிருந்து பார்வையாளர்கள் கேட்ட வினாக்கள்), தமிழை முதன்மைப் படுத்தி நடத்துகிற தமிழ்ப் பள்ளிகள் ( 3 பள்ளிகள்), ஆங்கிலவழியில் தமிழ் – இணையப் பாடங்கள் (35 பாடங்களில் தமிழ் கற்கலாம்).

நாள் ஒரு நூல் பகுதியில் இருப்பவை…

நாளும் வலையேற்றுகிற நூல்கள் /இதழ்கள் பட்டியல் (நூலின் வரிசை எண் காண), படவடிவக் கோப்புகளாக்கிய நூல்/ இதழ்கள், (ஒரு பக்கத்திற்கு 50 நூல்கள்) (13 -8- 2010 அன்று வரை 1640 கோப்புகள் வலையேற்றப்பட்டுள்ளன) படவடிவக் கோப்புகளை இணைத்துள்ள பிற தளங்கள் (10 தளங்கள்), தானாகவே அகரவரிசைப்படுத்துகிற நூல்கள் பட்டியல் (565 நூல்கள்).

 ——————————————————————————–

தமிழம் வலையின் நான்கு பிரிவுகளையும் முழுமையாகப் பார்க்கவும், தமிழம் வலையை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவும், தமிழில் வெளிவந்த அரிய நூல்களைத் திரட்டவும், திரட்டிய நூல்களை அடுத்த தலைமுறையினருக்காகப் பாதுகாக்கவும், உங்களை அன்போடு அழைப்பது, தமிழ்க்கனல் – 9788552061

Posted in அறிவிப்புகள் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக