ஈரோட்டிலிருந்து ஒரு ஈமெயில்

தம்பிகளா!

 

என் திராவிடத்தை தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கும் தம்பிகளா.

என்னோடு தோள்நின்றீர்களே என்ன ஆனது உங்கள் தோழமைகள்.

என்னோடு பார்பனியத்தை எதிர்த்த உங்களுக்குள் எப்படி வந்தது பார்ப்பனியம்

என்னோடு இந்திய தேசியத்தை கேள்விகேட்டவர்களா

இன்று இல்லாத இறையாண்மை பற்றி பேசுகிறீகள்.

 

உங்களுக்கு எதற்கு கருப்பு சட்டை கொடுத்தேன் மூக்குசளி துடைக்கவா.

அது சரி கற்றுக்கொடுத்த என்னையே கவுத்துவிட்டு கழகம் அமைத்த உங்களுக்கு

காலில்விழும் தமிழனை கவிழ்க்க எத்தனை நேரம் பிடிக்கும்.

 

நினைவிருக்கிறதா என்னை

ஆவியே இல்லையென்று சொன்னவன்

பாவிகளாய் மாறிவிட்ட தம்பிகளுக்காக திரும்பிவந்திருக்கிறேன்
வா தம்பி வா என்னோடு போரிடு என்னை கொல்.

 

என் கொள்கைகளை பிசைந்து என்னை கல்லாக முச்சந்தில் நிறுத்திவிட்டு

கழகத்தை நடத்துகிறீர்களே நியாயமா?

 

தொடக்கத்தில் அய்யா அய்யா என்று வந்ததெல்லாம் பொய்யா தம்பி.

ஆரூரின் சூராவளியாய் ஆனாய் என்றல்லவா நினைத்தேன்

இன்று நீ யாரோவாகவோ நடிக்கிறாயே துடித்தேன்.

 

தெரிந்தேதான் நடிக்கிறாயா

என் கொள்கைகளை பொட்டலமாக மடிக்கிறாயா

அல்லது உள்ளுக்குள் துடிக்கிறாயா

உறவினர்களின் பிடியில் கிடக்கிறாயா

உன் வேகம் எனக்கு தெரியும்

தமிழின துரோகம் என்று முடியும்

 

தம்பி உனக்கு நினைவிருக்கா

நாம் கட்சிக்கொடி உருவாக்கியபோது நான் கருப்பு தானே கொடுத்தேன்

அதன் நடுவில் உன் குருதியால் வட்டம் வரைந்து சிவப்பாக்கி

என்னை சிலிர்க்கவைத்தாயே..

 

எங்கே சென்றது உன் தமிழின தாகம்

எண்பதை கடந்தபின்னும்

இன்னுமா அடங்கலை உன் ஆட்சித் தாகம்.

 

கருப்பாக தொடங்கியவனே

நீ சிவப்பாக சிந்தித்தபோது

தமிழனின் எதிர்காலமாவாய்

என்றென்னினேன்

நிரந்ததமாக உன்னில்

மஞ்சள் கலந்துவிட்டதாலோ

இன்று காவியாகிப்போனாய்

கதிரவனே

 

அன்று அண்ணாதுரையின் காதிலே என்ன உரைத்தாயோ

என்னைப்பற்றி அவதூறுகளை குரைத்தாயோ

அதை என்னிடம் மட்டும் மறைத்தாயோ

கூட்டிப்போனாயே என்னைவிட்டு

கூட்டுவைத்தாயே மற்றவரோடு மதிகெட்டு

 

அப்போதே சொன்னேனே கேட்டாயா

அரசியல்கட்சியாக வேண்டாமென்று

இதற்குத்தான் தம்பி பார்த்தாயா

நீ இரும்பாகிவிட்டாய்.

 

அது சரி தம்பி !

என்னைவிட்டு பிரிவதாக என்ன காரணம் அண்ணாதுரைக்கு சொல்லிக்கொடுத்தாய்.

தள்ளாத வயதில் என் துணைக்கென்று திருமணம் செய்ததை, 

தனிமனித ஒழுக்கம் என்று காரணம் காட்டிவிட்டு

பிறகு நீங்கள் தனித்தனியாக!!! எத்தனைமுறை ஒழுக்கத்தை கட்டி காப்பாற்றியது சரியா?

 

ராஜாஜியோடு நான் பேசியதே தவறென்ற நீங்கள்தானே தம்பிகளா

பின் ஆட்சிக்காக ஆரியரோடு கூட்டுவைத்தீர்கள்

அன்றே தமிழினத்துக்கு வேட்டுவைத்தீர்கள்.

 

அடப்பாவி தம்பிகளா! அப்பாவித் தமிழினத்தை உங்களிடமா அடகுவைப்பேன்.

இந்த அவமானத்திற்கு அவர்களிடம் என்று மன்னிப்பு கேட்பேன்

 

 

 

 

This entry was posted in ஆத்திரம் and tagged , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக