பேராசிரியர் பெரியார்தாசன் பேச்சு

தனித்தனி அழைப்புகளால் வந்தவர்களாலேயே நிறைந்துவிட்டிருந்தது அரங்கு. சில நாள்களாக ரியாத்தில் மையங்கொண்டிருக்கும் பெரியார்தாசன் என்னும் பேச்சுப்புயலில் தங்களுக்கான/தங்கள் சமூகத்திற்கான அறிவுரை மழையை எதிர்பார்த்து தமுமுக என்கிற முஸ்லிம் பொதுமக்கள் சமூக அமைப்பு ஞாயிறு இரவு பத்தாவில் இந்தக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. 

கடந்த வியாழன் இரவு, ரியாத் தமிழ்ச்சங்கத்தின் பொன்மாலைப் பொழுதிலும், மறுநாள் எழுத்துக்கூடத்தின் வெள்ளிமாலையிலும்  பேராசிரியரின் பேச்சைக் கேட்டு சிந்தை நிறைந்தவர்கள் வந்திருந்து இந்த அரங்கையும் நிறைத்திருக்க,  இந்திய அரசியலின் புரட்டுத்தனங்களை தன் பேச்சில் பட்டியலிட்டார் பேராசிரியர்.

முஸ்லிம்கள், குறிப்பாக தமிழக முஸ்லிம்களைக் குறித்து கூறும்போது,  இறையியல் தத்துவம், வணக்க வழிபாடுகள், மறுமை நம்பிக்கை  என்கிற மூன்று அம்சங்களிலேயே மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்களே தவிர, இரத்தமும் சதையும் உள்ள சகதமிழர்களாக, அவர்தம் தொப்புள்கொடி உறவாகத்தான் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்றார் பேராசிரியர். 

இஸ்லாமிய  தத்துவத்தின் தாக்கம்

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்…
என்று தொடங்கும்

 நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலும் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் என்ற  திருநாவுக்கரசின் சைவப் பாடலிலும் இருப்பதைச் சுட்டிவைத்தார்.

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், கடத்தல்காரர்களாகவும், பலதார மணமுடிப்பவர்களாகவும் கருதும் போக்கு கடந்த சில வருடங்களாகத்தான் கட்டிஎழுப்பப்பட்டது என்ற பேராசிரியர், பாபர்மசூதி இடிப்பு அதன் தொடர்ச்சியே என்றார்.

முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகிய ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றிணைவதன் மூலமே தங்கள் உரிமைகளை சரியாகப் பெற முடியும்  என்ற பேராசிரியர் அப்படி ஒன்றிணைந்துவிடாமல் சுட்டா’ராம்’ கட்சியும், செத்தா’ராம்’ கட்சியும் சூழ்ச்சி வலை பின்னுவதை எளிதாக விளக்கினார். “நான் அடிக்கற மாதிரி அடிக்கறேன், நீ அழற மாதிரி அழு” கதை தான்.

செத்தவனும் ராம் ராம் என்று சொன்னான், சுட்டவனும் ராம் ராம் என்று தான் சொன்னான். ஆக, இந்த சூனாராம் சேனாராம்களே இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதை ‘நாம்’ தெளிவாக உணர்ந்துகொள்ளவேண்டும் என்றார். இங்கே, ‘நாம்’ என்பது ஒடுக்கப்பட்ட அனைவரும்.

ஒரு அரசின் மூன்று அங்கங்களாக ஆட்சித்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்ற மூன்று துறைகள் விளங்குவதைக் குறிப்பிட்ட பேராசிரியர், சட்டங்கள் இயற்றும் அவைகளில் இடம்பெற முஸ்லிம்கள் இப்போது முனைப்பு காட்டினாலும், மற்ற இருதுறைகளிலும் அதேபோல முன்வரவேண்டும் என்றார்.  முழுமையான முன்னேற்றம் மூன்றிலும் தம் விகிதத்தை உயர்த்திக்கொள்வதில் தான் இருக்கிறது என்ற உண்மையைச் சொன்னார்.” இல்லேன்னா, அவன் விட்டால் இவன் விடமாட்டான்,  அவனும் இவனும் விட்டா மூணாவது ஆளை வைத்து ஸ்டே வாங்குவான்”

ஆட்சியாளர்கள்,  நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகள், நீதித்துறை என்று எந்த இடத்திலும் இடர்ப்பாடுகள் நேரலாம் என்பதையும் விளங்க வேண்டும் என்றார்.

1916லிருந்து 1952 வரை இடஒதுக்கீடு பெற்றிருந்தும் முஸ்லிம் சமூகம் நிர்வாகத்துறையில் குறிப்பிடத்தக்க இடம்பெறவில்லை என்ற பேராசிரியர், அதன்பிறகு முஸ்லிம்களின் வளமை பற்றிய போலித்தோற்றத்தால்; மாயையால் அந்த இடஒதுக்கீடு பறிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார்.

சச்சார் கமிட்டி அறிக்கை முஸ்லிம்களின் யதார்த்தமான பொருளாதார நிலையைப் படம்பிடித்து காட்டும்வரை, முஸ்லிம்கள் கூட தங்களின் உண்மைநிலையைத் தெரிந்துகொள்ளாமல் தான் இருந்தார்கள் என்பதையும் பெரியார்தாசன் சுட்டுவதற்குத் தவறவில்லை.

அரசியல் சட்ட நிர்ணய சபைக்கு அம்பேத்கர் தேர்வு பெற்று விடாமல்  ஆதிக்கவாதிகள் சூழ்ச்சி செய்து தோற்கடித்தபோது, படித்தவராக, நுண்ணறிவு மிக்கவராக விளங்கிய அம்பேத்கர் அதை முறியடித்து அந்த சபைக்கே தலைவராக வந்த விதம் பற்றி பேராசிரியர் விளக்கியபோது அதில் சமூகத்துக்கு ஒரு செய்தி இருந்தது.

 ” முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களுக்கெதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவார்கள் ஆதிக்க வாதிகள். அப்படிப்பட்ட முஸ்லிம்களைத் தான் தம் இயக்கத்தில்; கட்சியில் பதவியில் வைத்து அழகு பார்ப்பார்கள்” என்றார் பேராசிரியர்

ஒற்றுமை  என்னும் விழிப்புணர்ச்சி பற்றி கருத்து சொல்லவந்த போது முஸ்லிம்களின் இயக்கவெறி மாய்க்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி அழகாக குட்டவும் சுட்டவும் செய்தார் பேராசிரியர்.
“ஒரு ஊரில் மூன்று முஸ்லிம்கள் தான் இருக்கிறார்கள். ஆனால், நான்கு இயக்கங்கள் இருக்கின்றன. நாலாவதாக வெளியிலிருந்து வந்தவன், இந்த மூன்று பேரையும் ஒற்றுமைப்படுத்துவதற்காகவே இயக்கம் கண்டதாகச் சொல்கிறான்”

உரை முடிந்ததும் இதே கருத்தில் மீண்டும் வினாவெழுப்பிய ஒரு சகோதரருக்கு  “இதுபற்றி தான் பேசியிருக்கிறேன், ஒலிநாடா கேளுங்கள்” என்றார் பேராசிரியர்.

இன்றைக்கு இளைஞர்கள் விழிப்புணர்ச்சி பெற்று அனைத்து ஒடுக்கப்பட்டவர்களையும் இணைத்து களம் காண்பது காலத்தின் தேவையாக இருப்பதைச் சொன்ன பேராசிரியர் மேலும் தொடர்ந்து……..
“இறைவனுக்கு இணைவைக்கக்கூடாது” என்று சொல்கிற  ஒரு முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஒருதலைவர், அதுவும் பேராசிரியராக இருந்தவர்  இடஒதுக்கீட்டுக்காக முதல்வரைப் புகழும்போது சொன்ன வார்த்தைகளைச் சொன்ன பேச்சாளர் ‘ஒரு முஸ்லிம் இப்படியெல்லாம் பேசலாமா?’ என்ற தன் ஆதங்கத்தையும் வெளியிட்டார்.

தம் சமூக நலனை முன்னெடுத்துச்செல்ல களம் காண்கிற இளைஞர் பட்டாளத்தைப் பாராட்டிய பேராசிரியர் உரையில் நம்மைப் போன்றவர்களுக்குப் பாடமும், ஊக்கமும் இருந்தது என்றால் மிகையில்லை.

நன்றி: இப்னு ஹம்துன்

Advertisements
This entry was posted in மீள்பதிவு கட்டுரைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s