இந்தியாவில் தமிழ் பேசுகின்றவர்கள் இருக்கிறார்களா?’–இந்திரா பார்த்தசாரதி

நான் 1993இல் சிட்னியிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது என்னுடன் ஓர் ஆஸ்த்ரேலியாவைச் சேர்ந்த வெள்ளையர் ஒருவர் பக்கத்து இடத்தில் பயணம் செய்தார்.

அவர் சிங்கப்பூரில் இறங்கி ஃப்ரான் ஃப்ர்ட்( ஜெர்மனி) போவதாக இருந்தார். தம்மை அவர் அறிமுகம் செய்து கொண்டவுடன் நான் என்னை என் பெயரைச் சொல்லி இந்தியத் தமிழன் என்றும் கூறினேன்.அதற்கு அவர் கேட்ட கேள்விதான் என்னைத் திடுக்கிட வைத்தது.
‘இந்தியாவிலும் தமிழ் பேசுகின்றவர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்டார்.

காரணம், ஆஸ்த்ரேலியாவில் ஈழத்தமிழர்கள் தங்கள் தமிழ்க் கலாசார அடையாளத்தை

அங்குள்ள மக்களுக்கு அவர்கள் எடுக்கும் விழாக்கள் மூலம் திறம்படப் புலப்படுத்தி வந்ததினால், நான் சந்தித்த அந்த ஆஸ்த்ரேலியர், இலங்கையில் மட்டுந்தான் தமிழ் பேசும் இனம் உண்டு என்று நினைத்திருக்கிறார். ஆஸ்த்ரேலியாவில் ஈழத்தமிழர்களுக்கு முன்னாலிருந்தே பல ஆண்டுகளாக இந்தியத் தமிழர்கள் இருந்து வந்தாலும், அவர்கள் தமிழ் அடையாளத்தை மற்றவர்களுக்குத் தெரியாமல் ரகஸ்யமாகக் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது! அதனால்தான், அந்தச் சராசரி ஆஸ்த்ரேலிய வெள்ளையர் என்னை ‘ இந்தியாவிலும் தமிழ் பேசுகின்றவர்கள் இருக்கிறார்களா?’ என்று என்னைக் கேட்டிருக்கிறார்!

ஈழத்தமிழர்களுடைய கலாசார அடையாளம் தமிழ். சமுதாய-மானுடவியல் வல்லுநர்கள், மொழி, உணவு முறை, ஒற்றுமைதான் பண்பாட்டு அடையாளங்களுக்குள் மிகவும் ஆதாரமானவை என்று கூறுகின்றார்கள். மதம் அவ்வளவு முக்கியமான அடையாளமன்று.

நான் ஐம்பதுகளில் தில்லியிலிருந்து சென்னைக்கு வர வண்டி ஏறினேன். அப்பொழுது நான்கு தமிழ் முஸ்லீம்கள் அந்தக் ‘கம்பார்ட்மென்டி’ல் இருந்தார்கள். ஜும்மா மஸ்ஜித்தில் மூன்று மாதங்கள் சமயப் பயிற்சி பெற்றுச் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

‘ அப்பாடா! மூணு மாசம் வெளியிலே போக விடாமெ அந்த வறட்டு சப்பாத்தியைக் கொடுத்துக் கொன்னுட்டாங்க.மதியம் போங்கடான்னவுடனே, கன்னாட் ப்லேஸ்லே மெட்ராஸ் ஹோட்டலுக்கு வந்து இட்லியும் மஸால்தோசையும் வெட்டினப்புறந்தான் தெம்பே வந்தது’ என்றார் ஒருவர். மற்றவர்களும் சிரித்துக்கொண்டே ‘ஆமாண்ணே’ என்றார்கள்.

‘ உலக வரலாற்றில் மொழிப் போராட்டத்தில் உருவான முதல் நாடு பங்களாதேஷ்தான்’ என்று பெருமையுடன் கூறியிருக்கிறார் வங்கப் பிதா முஜ்பிர் ரஹ்மான்.

அப்படியிருக்கும்போது ‘தமிழ் ஈழத்தை’ இந்தியத் தமிழர்கள் ஆதரிப்பது எப்படித் தேசத் துரோகமாகும் என்று எனக்குப் புரியவில்லை. சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, தொடர்ந்து வேறு மொழி பேசும் ஒரு சிறுபான்மை இனத்தை, மொழியின் காரணமாகவும், மதத்தின் காரணமாகவும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் ஒரு நாட்டினின்றும் தனி நாடாகப் பிரியும் உரிமையை ஐ.நா சட்டம்(Charter) அனுமதிக்கின்றது.

யுகோஸ்லாவியா விலிருந்து கொஸாவா பிரியவில்லையா? இந்தோனேஷியாவிலிருந்து டிமோர் பிரியவில்லையா? கொஸாவா ஐரோப்பிய நாடு என்பதாலும், டிமோர் கிறித்துவச் சிறுபான்மையினர் என்பதாலும் அவைகளுக்கு மேற்கு நாடுகள் தரும் தனிச் சலுகையா?

ஜின்னா அன்று கூறியது போல ஒரு ‘brute majority’ -ஐச் சார்ந்த ஒரு கொடூர ஆட்சி சிறுபான்மையினரைக் காலடியில் போட்டு நசுக்கி வக்கிரக் கூக்குரல் இடுகின்றது.அன்று வங்க விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த இந்திய அரசாங்கம், இப்பொழுது அதே மாதிரியாக, இந்தியாவில் பேசப்படும் ஒரு மொழியைத் தங்கள் தாய் மொழியாகக் கொண்ட ஓரினம் பூண்டோடு அழிக்கப் படுவதைப் பார்த்து,’ இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை’ என்று கூறுவதற்கு என்ன காரணம்?

காஷ்மீர் பிரச்சினையின் காரணமாகத்தான் தமிழ் ஈழத்தை மத்திய இந்திய அரசு வரவேற்கத் தயங்குகிறது என்கிறார்கள். அன்றே ஜம்மு-காஷ்மீரின் தனிப்பெரும் தலைவராக இருந்த ஷேக் அப்துல்லா விரும்பியபடி, இந்திய ஃபெடரல் ஆட்சிக்கு உட்பட்ட சுயாட்சி உரிமையைக் காஷ்மீருக்கு வழங்கியிருந்தால், காஷ்மீர் பிரச்சினை இப்பொழுதுள்ள அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்காது. காஷ்மீர் மக்களில் பெரும்பான்மையோர் பாகிஸ்தானுடன் சேர விரும்பவில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு இந்திய அரசின்மீது வெறுப்பு கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஷேக் அப்துல்லா கூறிய யோசனையின் போது, பிந்திய ஐம்பதுகளில், காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் உறவைத்தான் வரவேற்றார்கள் என்பது வரலாறு. ஆனால் நேரு தம் மூதாதையர் காஷ்மீரைச் சார்ந்தவர்கள் என்பதால், இன்று காங்கிரஸ் அவர் குடும்பச் சொத்தாக ஆனது போல, தம் குடும்பச் சொத்தாகிய காஷ்மீர் சுயாட்சி பெறுவதை விரும்பவில்லை. ஷேக் அப்துல்லாவைச் சிறையில் அடைத்து, லஞ்சல் மன்னன் பக்ஷி குலாம் அஹமெத்தை முதல் அமைச்சராக்கினார். அன்று தொடங்கிய சிக்கல் இன்னும் தீரவில்லை.

இந்தியத் தமிழர்களில் பெரும்பான்மையோர் புலிகளின் வன்முறைப் போரை ஆதரிக்காமல் இருக்கக்கூடும். ஆனால் இது இப்பொழுது, புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையே நிகழும் போர் என்று கூறமுடியாது. இலங்கையில் இப்பொழுது நடப்பது இனப்படுகொலை( genocide) அன்று ஸெர்பியாவில் ஸ்லொபொதான் மிலொசெவிச் செய்த இனத் தூய்மைக் (ethnic cleansing) கைங்கர்யம். செர்பிய இனத்தைச் சாராத (முஸ்லீம்கள்) மக்களைக் கொன்று குவித்தார்கள். மிலொசெவிச்சைக் கைது செய்து, உலக நீதி மன்றத்தில் விசாரிக்க உத்தரவிட்டது போல், ராஜபக் ஷேவையும், அவன் கைக்கூலிகளையும் உடனே கைது செய்து விசாரிக்க ஐ.நா. சபை ஆவன செய்தல் அவசியமென்று தோன்றுகிறது.

இந்தியா இந்த விவகாரத்தில் குறுக்கிட மறுக்கிறது. மறுப்பதோடு மட்டுமல்லாமல், ராஜபக் ஷேவுக்கு ராணுவ உதவி அளித்து வருகிறது. வங்கப் போரின்போது, கிழக்குப் பாகிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பினார் இந்திரா காந்தி. காரணம், அது இந்தியாவின் பிரிய எதிரியாகிய பாகிஸ்தான் சம்பந்தப் பட்ட விஷயம். மேற்கு வங்காளத்திலிருந்த வங்காளிகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய எல்லா கட்சிகளைச் சார்ந்தவர்களும், ஒன்றுபட்டு கூக்குரல் எழுப்பினர். ஆனால் இப்பொழுது தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சினைக்காகப் போராடுகின்றவர்களில், பழ.நெடுமாறனைத் தவிர, மற்றைய கட்சிகளைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் இப்போராட்டத்தில் ஒரு personal agenda இருக்கிறது. அரசியல் கட்சிகளைச் சார்ந்த இந்தியத் தமிழர்களை நம்பி இருப்பதுதான் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய துர்பாக்கியம்!

மத்திய அரசை வற்புறுத்திச் செயல் பட வைப்பதற்கான ஒற்றுமை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இல்லை.

கட்சிகளைச் சாராத நம் போன்றவர்களுக்குத்தான் ஒரு பழம்பெரும் இனம் அழிக்கப்பட்டு வருகிறதே என்ற நியாயமான வேதனை மேலிடுகிறது. ஆனால் நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லை.’ துன்பத்தை அனுபவிக்கின்றவர்களைக் காட்டிலும், அவர்களுக்கு உதவ நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என்று செயலற்ற தன்மையில் ஏங்குவதுதான் மனிதனுக்கு ஏற்படும் மாபெரும் கொடுமை’ என்றான் ஆலிவர் கோல்ட்ஸ்மித்.
நன்றி: http://www.tamilskynews.com/index.php?opti…4&Itemid=54

Advertisements
This entry was posted in மீள்பதிவு கட்டுரைகள். Bookmark the permalink.

One Response to இந்தியாவில் தமிழ் பேசுகின்றவர்கள் இருக்கிறார்களா?’–இந்திரா பார்த்தசாரதி

  1. babu சொல்கிறார்:

    What is very sad is, that we are like audience, we are not able to do anything. That make me sick of everything. This life is worthless and useless. As a Sri Lankan tamil, even though I am in a safe place, I could not be happy for a minute.
    What is happening in Sri Lanka is horrible.
    But nobody seem to care about it because it is happening to people who are powerless in all means.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s