மெளனங்களின் நிழற்குடை -கவிமதி

 
ஒரு நூலை படித்து முடித்துவிடும் நொடிகளில் அந்நூல் குறித்தான நமது பார்வை என்ன என்பதை நாலுவரியேனும் எழுதிவிடுவதுதான் வாசகனுக்கும் படைப்பாளிக்கும் இடையேயுள்ள ஓடுதளத்தை குறைப்பதுடன், சமுதாயத்தில் நம்மையும் ஒரு அங்கீகாரமாக இணைத்துக்கொள்வதில் நாம் வாழும் வாழ்க்கை நிறைவு பெருகிறது.

எழுதுவதற்காக நூலை தொட்டவுடன் இரண்டு சம்மட்டிகள் நம் தலைக்குமேல் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒன்று; விமர்சனம் என்பது சுவற்றில் எறியப்பட்ட பந்து உன்னை நோக்கி திரும்ப வரும் அதை எதிர்நோக்க தயாராக இருக்கவேண்டும் என்பதும், இரண்டாவது; உன் பார்வையே தீர்ப்பாகிவிடாது என்பதை உணர்ந்து கர்வத்தை கழற்றி எறிந்துவிட்டு எழுது என்பதுமாகும். எனவே விமர்சனம், ஆய்வு, பார்வை, அணிந்துரை, வாழ்த்துரை, கருத்து என்று பலவகை பெயர்களை கொண்டிருந்தாலும் எல்லாம் ஒரே நோக்கத்தை முன்னிருத்தியதே.

தன் முதல் நூலுக்கு “இரண்டாவது கருவறை” என்கிற பெயரை வைத்தவர் தொடர்ந்து காதலாகி, மழை ஓய்ந்த நேரம், மெளனங்களின் நிழற்குடை என தன் எழுத்து பரிணமங்களை வளர்த்துக் கொண்டேயிருப்பவர் இசாக் என்பது அவரின் ஒவ்வொரு நூலிலும் தெரியவருகிறது.

அந்தி சாயம் மாறும்வரை மாடுகளுக்கு மத்தியில் மனம்விட்டு மடிகிடந்து பேசிய காதலின் ஒற்றைக் கொலுசொலி வரப்புகள் தாண்டும் வேகத்தில் வாயாடிக்கொண்டேவரும். தலைகீழ் மரமேறி பனைக்கு பதில் விரலை வெட்டிக்கொண்டாலும் பீறிடும் குருதியையும் பொருள்படுத்தாது ஒரு நுங்கை இருவர் வாய் கவ்வி உறிஞ்சுகையில் ஏற்படும் காதல். ஆடுகளை பிடித்து காம்பிழுத்து ஒருவர் முகத்தில் மற்றவர் பால்பீய்ச்சி விளையாடி, வயற்காடுகளில் சுற்றி திரிந்துவிட்டு வீடுசேர்கையில் காதல் துளிர்விட்டதை காட்டிக் கொடுக்காமல் என்ன செய்யும் பாவடையில் ஒட்டிய மண்ணும், ஆட்டுப்பால் கவுச்சியும்.

சேற்றுக்குள் உடல் சொருகி விளையாடும் விறால்மீன்களிலும், காடை, கெளதாரி, மரங்கொத்தி, ஆள்காட்டியென காதலை ஒரு வரிவிடாமல் வானத்திலும் நிலத்திலும் எழுதும் பறவைகளின் பாசாங்குகளிலும் இசாக் கவிதைகளை பிடிக்கிறார் என்பதை நூலின் ஒவ்வொரு கவிதையும் எடுத்துச் சொல்லுகின்றன.

“கருவமரத்துப் பிசினில்
சிக்கியிருந்த
வண்ணத்துப்பூச்சியை
எடுத்துப்
பறக்கவிட்டபோது
ஓடிவந்து
ஒட்டிக்கொண்டது
காதல்”
என்று தனது காதலாகி தொகுப்பில் தொடங்கியவர்தான்
“ஊரே
பார்த்து ரசிக்கும் கோலத்தை
கைகளால் வரைகிறாய்
அடீ… நான்
பார்த்து ரசிப்பதற்கான கோலத்தை
கால் விரல்களால்
வரைகிறாயே…”

என தொடர்ந்திருப்பதிலேயே இசாக்கின் கவிதை தவமானது நீண்டுக்கொண்டே செல்கிறது.
காதலோ, கவிதையோ பெண்களின் முந்தானையில் மட்டுமில்லை, மிதமான வெய்யில் சூட்டில் ஒதுங்கி நின்று ஓய்வெடுக்கும் மெளனங்களின் நிழற்குடையில் இருக்கிறது என்கிறார்.
“தம்பி இசாகின் காதலர்கள் ஈராக்கில் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்” என இந்நூலில் கவிச்சித்தர் மு.மேத்தா எழுப்பியுள்ள வினாவிற்கு

“நீயுண்டு
உன் வேலையுண்டு
என தான் வாழ்கிறாய்
என் மனசென்னவோ செய்கிறதே
அடேய்… இதுதான்
எல்லைதாண்டிய பயங்கரவாதமோ? –
என்றும்

 

“எண்ணெய் தேசத்தில்
பணியாற்றுவதென்னவோ நீ
என்ன கொடுமை
அணைக்க முடியாத நெருப்பாய்
கொளுந்துவிட்டு
எரிந்துகொண்டிருக்கிறேன் நான்”
-என்றும் விடையளித்திருக்கிறார்.

நாம் காதலுக்காக நிறைய கோயில்கள், நினைவுச் சின்னங்கள் தொடங்கி கையில் கிடைப்பவற்றிலெல்லாம் காதல் பற்றி செதுக்கி செதுக்கிவைத்து நூற்றாண்டுகள் கெடாமல் பாதுகாப்போம் ஆனால் அதே காதல் நம்வீட்டுக்குள் நுழைந்துவிட்டாலோ அதற்கு தூக்குக்கயிறுகளையோ, தூக்கமாத்திரைகளையோ பரிசாகதந்து காதலை கல்லறைகளில் வைத்துப்பாதுகாப்போம்.

“நாம்
மிகவும் மென்மையானவர்களாயிருக்கிறோம்
அதனால்தான்
பெற்றோரின்
போலி மிரட்டல்களுக்கும்
நம்மை
நாம் இழந்துகொள்கிறோம்

– என்று இசாக் இளம் காதலர்களை தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லுகிறார்.

பெண் குறித்தான கவிதையோ, காதல் குறித்தான கவிதையோ ஒரு ஆண் படைப்பாளி எழுதுகிறபோது முடிந்தவரை பெண்ணுக்கு கட்டளை இடுவதுபோலவோ, தான் அவளிடம் (காதலில்) அனுபவித்த நிமிடங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து நிறைவுகாண்பதுபோலவோ தெரிவது இயல்பு.

அதனால்தான் ஆண் படிப்பாளிகளின் எழுத்துகளில் பெண்ணுறுப்புகள் பகடையாக உருட்டப்படுகையில் கூட அதை அழகியல் என்று திருட்டுதீர்ப்பு எழுதுகிற ஆணாதிக்கம். அதையே ஒரு பெண் படைப்பாளி எழுதினால் ஆபாசமாக எழுதுகிறாள் என்கிற வசைகளை எழுப்பி தன் பொறாமையை சமுதாய ஒழுக்கம் என பிதற்றிக்கொண்டலையும். படைப்புகளில் பால்மாறி பேசுகையில் எதிர்பாலினத்து உணர்வுகளையும் பதிவுசெய்ய வழிவகுக்கும் என்பதை இசாக் பல கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போதும் காதல் முழுமைபெறவேண்டுமெனில் ஆண் காதலியாகவும், பெண் காதலனாகவும் பால்மாற தெரிந்திருக்க வேண்டும்.

“நேற்று
நாம்
தனிமையில் சந்திக்க நேர்ந்தபோது
வியத்து வடிகையில்
புரிந்துகொண்டேன்
நான்
வயசுக்கு வந்துவிடேனென்று”

இந்த கவிதையில் வயசுக்கு வந்திருப்பது யார் காதலனா? காதலியா? தொகுப்பின் படைப்பாளி ஆணென்பதால் பட்டென்று சொல்லிவிடலாம் இக்கவிதையில் பெண்தான் பேசுகிறாளென்று. ஆனால் இந்த இயற்கை மாற்றமானது ஆண், பெண் இருவருக்கும் நிகழ்ந்ததால்தானே காதலர்களானார்கள்! இங்கு வியர்த்து வடிந்தது ஆணுக்குமல்ல, பெண்ணுக்குமல்ல காதலுக்கு. அதைவைத்துதான் அவர்களின் காதல் ஆபாசமற்றது எனலாம். இருப்பினும் தான் வயதுக்கு வந்ததை; இதனால் சகலமானவருக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் என பெண் கட்டாயம், பறைசாற்றிதான் ஆகவேண்டுமா?

காதலின் அத்தனை பரிணாமங்களையும் தனது படைப்புகளில் பதிவு செய்திருக்கும் இசாக் சமூக படைப்பாகவும் நிறைய செய்திருக்கிறார் என்பது அறிந்ததே. இயற்கையின் வாழ்நிலை மாற்றங்களுக்கு தகுந்தார்ப்போல் படைப்பாளிகளும் தங்கள் கருத்து வேற்றுமைகளை தொடர்நிலை பதிவுகளாக அனைத்து தரப்பிலும் பதிவுசெய்துகொண்டே இருப்பது இலக்கியத்தின் தொய்வற்ற வளர்ச்சியை காட்டுகிறது. அத்தகையதொரு வளர்ச்சியில் இசாகின் பங்கானது அவரின் இருத்தலை தூக்கிநிறுத்தும் என்கிற நம்பிக்கையை “மெளனங்களின் நிழற்குடை” நமக்கு ஊட்டுகிறது. 

கவிமதி (செயலர்.அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை துபாய்)

Advertisements
This entry was posted in நூல் விமர்சனம். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s