“ராக்கி” சாதி,மதத்தை கட்டி காப்பாற்றும் கயிறு

புளி என்ன விலை விற்றாலும் ஆண்டுக்கு ஒரு நாள் வயசுப் பசங்களின் வயிற்றில் செலவே இல்லாமல் கரைகிற நாள் ஒன்று உண்டென்றால் நிச்சயம் அது ரக்சா பந்தன் நாளாக மட்டுமே இருக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் வரக்கூடிய முழு நிலவு நாள் ரக்சாபந்தன்.

ரக்சா பூர்ணிமா என்ற பெயரில் வடமாநிலங்களிலும் வடமாநில மக்கள் மிகுதியாக வசிக்கும் பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. சொந்த சகோதரர்களுக்கும் இந்த நாளில் சகோதரிகள் ரக்சை கட்டிவிடுவார்கள். ரக்சையைக் கட்டாவிட்டாலும் அவர்களுக்குள் சகோதர உணர்வு இருக்கும் என்பதால் அதைக் குறித்து அதிகம் பேசப்போவதில்லை.

அன்பின் பெயரால் நடைபெறுகிற விழா என்று சொல்லப்பட்டாலும் காதலர் தினத்தைப் போலவே இதனுள்ளும் பல வர்த்தக நோக்கங்கள் ஒளிந்திருக்கிறது.

காதலர் தின வாழ்த்து அட்டைகளுக்கும், ரோஜாப் பூக்களுக்கும், காதலர்களோடு தொடர்புடைய பரிசுப் பொருட்களுக்கும் ஒரு சந்தையை உருவாக்கித் தருகிறது என்றால், ராக்கி கட்டும் நாள் விதவிதமான ராக்கி கயிறுகளுக்கும், இனிப்புப் பொருட்களுக்கும், சகோதர சகோதரிகளுக்குள் பரிமாறிக் கொள்ளக் கூடிய பரிசுப் பொருட்களுக்குமான சந்தையை உருவாக்கித் தருகிறது.

பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ, அலுவலகங்களிலோ உடன் பணிபுரிகிற ஆண்களுக்குப் பெண்கள் இந்த கயிறைக் கட்டுகிறார்கள். பதிலுக்கு அவர்கள் இனிப்புகள், புத்தாடைகள், பணம் போன்றவற்றைப் பரிசளிக்க வேண்டும். ஆழ்ந்து நோக்கினால் உள்முகமாகப் புதைந்திருக்கும் சில செய்திகளையும் புரிந்துகொள்ளலாம்.

பெண்கள் யாருக்கெல்லாம் கயிறு கட்டவேண்டும் என்று பட்டியலிடுகிறார்களோ, அந்த நபர்களில் பெரும்பாலோருக்கு அன்பு, நட்பு, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுவது வெகு குறைவே. இன்னாரிடமிருந்து எனக்குப் பாலியல் தொந்தரவுகள் வரக் கூடாது, அதற்கு இந்த நாளை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பே இப்படித் தேடித் தேடிக் கயிறு கட்டுவதற்கான காரணமாக இருக்க முடியும்.

இந்தக் கயிறு கட்டும் நாளுக்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க போன்ற மதவாத அமைப்புகளின் ஆசீர்வாதம் கிடைத்து வருகிறது. இவர்கள் மட்டுமல்ல அனைத்து மத அமைப்புகளும் பகிரங்கமாகவே இந்த நாளை ஆதரிக்கின்றன. இந்த அமைப்புகள் சொந்த சகோதரர்களுக்குக் கயிறு கட்டிவிடுவதை விட பிற மதத்தவர்களுக்கும், பிற சாதியாருக்கும் கயிறு கட்டிவிடுவதையே பாராட்டுவார்கள். இந்த நாளின் சிறப்பு என்று இவர்கள் சொல்லுவது “இந்த நாள் மத வேறுபாட்டையும் கடந்து சகோதர பாசத்தை வளர்க்கிறது” என்பதே. இதற்கான பதில் இறுதிப் பத்தியில் இருக்கிறது.

எத்தனைதான் ஒற்றுமை சகோதரத்துவம் என்றேல்லாம் கரகமெடுத்து ஆடினாலும், இவர்கள் தலைகீழாய் நின்று தண்ணீர் குடிப்பதெல்லாம் சாதி, மதக் கட்டுமானங்கள் உடைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். அடப் பாவி, மத வேறுபாடு இல்லாமல் தானேடா கயிறு கட்டுகிறான் என்று நீங்கள் கேட்கலாம்.

இதையே கொஞ்சம் மாற்றி யோசித்துப் பாருங்கள், பெண்கள் மத, சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சகோதரர்களைத் தேர்ந்துகொள்ள ஒரு நாளை உருவாக்கியவர்கள், மத, சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள ஒரு நாளை உருவாக்கவில்லையே? அப்படியே இருந்தாலும் அது ஒரே ஜாதியைச்சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களுக்கு உரிய கணவன்/மணனவியைத் தேர்ந்தெடுக்கக் கூடிய சுயம்வர விழாக்கள் மட்டுமே இருந்துவருகின்றன.

இந்த நாளுக்கான ஆதிவேர், இந்தியாவின் மீது அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்த காலத்தில் ‘மிலேச்சர்கள்’ தங்கள் வீட்டுப் பெண்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதிலிருந்து காப்பாற்றிக் கொள்வது என்ற கருத்தியலில் ஆரம்பமாகிறது. ‘மிலேச்சர்களின்’ படையெடுப்புக்கு முன்பும் இந்தியாவில் படையெடுப்புகளுக்கும் போர்களுக்கும் பஞ்சமில்லை. அப்போது எவனாவது தங்கள் பெண்களைக் காக்க இப்படி ஒரு முயற்சி எடுத்தது உண்டா?

ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிற உரிமை அவளது சகோதரனுக்கு மட்டும்தான் இருக்கிறதா? ஏன், அவள் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கிறவர்களுக்குக் கிடையாதா? இதையெல்லாம் கூட ஒதுக்கி வைத்துவிடுவோம், ஒரு பெண்ணுக்கு, தன்னைத் தற்காத்துக் கொள்ளுகிற உரிமை கூடவா கிடையாது? ஆண்களால் மட்டுமே பெண்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கருத்தியலை நிறுவுகிற முயற்சியல்லவா இது.

ராஜபுத்திரப் பெண்கள் கற்பு நிலை தவறாதவர்களாம், அந்நியன் படையெடுத்து வரும்போது தோற்றுவிடும் நிலை ஏற்பட்டால் ராஜபுத்திர ஆண்கள் தங்கள் மனைவி, சகோதரி, குழந்தைகள் அனைவரையும் குத்திக் கொன்றுவிட்டு சண்டையிட்டு மடிவார்களாம்? அல்லது அவர்களே தீமூட்டி விழுந்து சாக வேண்டுமாம். அந்தப் பெண்களின் கையிலும் ஆயுதத்தைக் கொடுத்திருந்தால் அவர்களாவதுசண்டையிட்டுத் தங்களைக் காத்துக் கொண்டிருப்பார்களே. குறைந்தபட்சம் ஆண்களைப் போல சண்டையிட்டாவது மடிந்திருப்பார்களே. கயிறு கட்டும் பண்டிகை உருவான அதே வடநாட்டில்தான் இந்த அவலங்களும் நிகழ்ந்திருக்கின்றன. கயிறு கட்டும் பண்டிகை கொண்டாடப்படுகிற அளவுக்குப் பெண்களுக்கு எதிரான இந்தக் குற்றங்கள் ஏன் பெரிதும் பேசப்படவில்லை?

காதலர் தினத்தைக் கண்டிக்கிற கலாச்சாரக் காவலர்கள் யாரும் இந்தக் கயிறு கட்டும் நாளைக் கண்டிப்பதில்லை. ஏனெனில் சகோதரத்துவம் சாதி, மதக் கட்டுமானங்களை உடைக்காது. ஆனால் காதல் சாதி மதத்தை மீறிய சந்ததியை உருவாக்கிவிடும். கவனிக்கவும், “காதல்” சாதி, மதம் மறந்த சந்ததியை உருவாக்கும் என்று தான் சொல்லியிருக்கிறேன். காதலர் தினம் அப்படி உருவாக்கும் என்று சொல்லவில்லை.

தாலிக் கயிறு, ராக்கிக் கயிறு என்று ஏதாவது ஒரு கயிறு, பெண்களை காப்பாற்றுவதாக காலகாலமாக சொல்லிவருகிறார்கள். இந்தக் கலாச்சார கயிறுகளின் கட்டுகளில் இருந்து பெண்கள் தங்களை விடுவித்துக்கொள்ள நினைக்கும்போது, ஆணாதிக்க சமூகமும், இந்து சமூகமும் அவர்களுக்கு தூக்கு கயிறைதான் பரிசளிக்கிறது.

நன்றி: விஜய்கோபால்சாமி மற்றும்  வே. மதிமாறன்

Advertisements
This entry was posted in மீள்பதிவு கட்டுரைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s