மும்பைத் தமிழர்களின் அரசியல்… புதியமாதவி, மும்பை

மும்பைத் தமிழர்களின் அரசியல் – அகில இந்திய அரசியல் என்றும், மாநில அரசியல். என்றும். (மாநில அரசியல் என்றால் தமிழகத்து அரசியல்தான் !!) – எப்போதும் இரண்டு தளங்களில் பயணிக்கிறது. இந்திய விடுதலைக்கு முன்பே இக்காட்சிகள் இந்த மண்ணில் அரங்கேறிவிட்டன. ஒரு சாரார் மகாத்மாகாந்தியின் தேசிய நீரோடையில் கலந்து போனார்கள். இன்னொருசாரார் தந்தைபெரியாரின் திராவிட இயக்கத்திலும் பகுத்தறிவு பிரச்சாரங்களிலும் தங்களைக் கரைத்துக் கொண்டார்கள். இதில் அகில இந்தியக் கட்சிகளில் கலந்தவர்களை விட திராவிட இயக்கங்களின் பல்கிப் பெருகிய கட்சிகளைச் சார்ந்தவர்கள் அரசியல் மேடைகளை அதிகமாக ஆக்கிரமித்திருந்தார்கள். ஒவ்வொரு பகுதியிலும் செயலாளர், தலைவர் என்றும் மாநகரம், புறநகரம் என்றும் வகைப்படுத்திக்கொண்டு ஏதாவது ஒரு பதவியில் இருப்பதாகவே வலம் வந்தார்கள், வருகிறார்கள்.

ஆனால் அகில இந்தியக் கட்சியில் இருப்பவர்களுக்கு இப்படியான வாய்ப்புகள் இல்லை. மிஞ்சிப்போனால் தமிழர்கள் அதிகம் வாழுமிடங்களில் ஏதாவது பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றன பெயரளவில். ஓட்டுவங்கியை நம்பியே அரசியல் நடத்தும் நம் கட்சிகள் இங்கிருக்கும் தமிழர்களுக்கு அரசியல் தலைமையை/ செல்வாக்கான பதவியைக் கொடுத்து இந்த மண்ணின் மைந்தர்களுடைய ஓட்டுகளை இழக்க விரும்புவார்களா என்ன?

1962ல் வி.கே.கிருஷ்ணமேனனை அன்றைய இந்தியப் பிரதமர் நேருஜி நாடாளுமன்ற தேர்தலில் மும்பை காங்கிரசு உறுப்பினராக முன்மொழியும்போதே மாநிலக் காங்கிரசு அதை எதிர்த்து தங்கள் உறுப்பினரை நிறுத்தியதும் 1967ல் கிருஷ்ணமேனன் சுயட்சையாக நின்று தோற்றுப்போனதும் நடந்தது.

நடைமுறைச் சிக்கல்கள்

இந்து-முஸ்லீம் கலவரம் வந்தால் இங்கிருக்கும் சிவசேனை தமிழனையும் இந்துவாகப் பார்க்கும் வித்தையை நடத்துகிறது. ஆனால் அதிகாரப்பகிர்வு வரும்போது தமிழன் “சாலா மதராஸி” ஆகிவிடுகிறான். இந்த ஃபார்மூலாவை காங்கிரசு, பா.ஜ.க, பொதுவுடமை .. என்று எல்லா அகில இந்தியக் கட்சிகளும் பின்பற்றுகின்றன என்பது தான் உண்மை. என்ன கொஞ்சம் விகிதாச்சார வேறுபாடுகள் இருக்கும். அவ்வளவு தான். ஆனால் மாநில அரசியல் கட்சியாக தன்னை வளர்த்துக் கொண்டிருக்கும் சிவசேனை இதைப் வெளிப்படையாக சொல்லிக்கொண்டே செய்கிறது. ஜனாதிபதி தேர்தலில் மராட்டிய மாநிலத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவே எதிர்க்கட்சி நிறுத்தும் நபரை ஆதரித்த சமீபத்திய நிகழ்வை நாம் யாரும் மறந்திருக்க முடியாது.

டாக்டர் பாபாசாகிப் பிறந்த இந்த மண்ணில் தலித்துகள் என்ற ஒற்றை அடையாளம் கூட மராட்டிய மாநில தலித்துகளுடன் எல்லா தளங்களிலும் தமிழ்த் தலித்துகளைச் சேர்த்து நிறுத்த முடியவில்லை. அம்பேத்கர் விழா, பேரணி, வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தல் இத்தியாதி செயல்பாடுகளில் எல்லாம் சேர்ந்து கூட்டுக்குரல் கொடுப்பவர்கள் “இட ஒதுக்கீடு, அதிகாரப் பகிர்வு” என்று வரும்போது மராட்டிய மாநில தலித்துகளாக மட்டுமே மண்ணின் மைந்தர்களாகி விடும் அற்புதம் நடக்கிறது. இன்றுவரை மராட்டிய மண்ணில் வாழும் தமிழ் தலித்துகளுக்கு மராட்டிய மாநிலத்தில் கல்வி/வேலைவாய்ப்பு என்று எவ்விதமான இட ஒதுக்கீடு சலுகைகளும் கிடையாது. தமிழக அரசு வழங்கும் சாதிச்சான்றிதழ் இந்த மண்ணில் வெறும் காகிதக்குப்பைதான். இதற்காக எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளும் வெறும் விழாக்களாகவும் வீரவசனங்களாகவும் முடிந்துப் போயின.

எனவே எழுத்தாளர் மலர்மன்னன் அவர்கள் சொல்லியிருப்பது போல “தாக்கரே மிகவும் வயது முதிர்ந்து விட்ட நிலையில், வெகு விரைவிலேயே சிவசேனையின் முகம் மாறும் விதமாகப் பிற மாநிலத்தவர் அதில் அதிக அளவில் சேர்ந்து, அதன் வட்டார அடர்த்தியை நீர்த்துப் போகச் செய்வது சாத்தியமே. ” என்ற கருத்தை நடைமுறைப் படுத்துவற்கான சாத்தியக்கூறுகளில்லை. இன்று ஷெட்டிகள் (கர்நாடகம்) பலர் சிவசேனையில் சேர்ந்திருப்பதைப் பத்திரிகை செய்திகள் மூலம் அறிய முடிகிறது. அவர்கள் சேர்ந்திருப்பது அவர்களின் (ஓட்டல்) தொழில் பாதுகாப்புக்காகத் தானே தவிர அதற்கப்பால் எந்தக் காரணமும் இல்லை. பல்வேறு பகுதிகளில் தமிழர்களின் குடியிருப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகிவிட்ட இன்றைய சூழலில் தமிழர்கள் மட்டுமல்ல, எந்த அயல் மாநிலத்தவரும் அந்தந்த மாநில அரசியல் கட்சிகளில் சேர்ந்து அவர்களின் வட்டார அரசியலை நீர்த்து போக வைக்கும் அதிசயத்தைச் செய்ய முடியாது. மாநில அரசியல் கட்சிகளின் கூட்டணியுடன் கூட்டணி நடுவண் அரசு தொடரும் காலக்கட்டத்தில் மாநில அரசியல் கட்சிகளின் இந்தப் போக்கை தேசியக் கட்சிகளால் விமர்சிக்க கூட முடியாது. மாநில அரசியல் கட்சிகள் எங்கெங்கோ தோன்றிவிடும் எந்தவொரு கட்சிக்கும் இங்கே கிளை இருக்கும் இரவு வரும் கூட்டம் வரும் என்று மும்பைத் தமிழர்களின் அரசியல் கட்சிகளைப் பற்றி எழுதியிருந்தார் மும்பைக் கவிஞர் கலைக்கூத்தன். அது உண்மைதான். தி.க.வில் ஆரம்பித்து பல்கிப் பெருகி இன்றைக்கு முளைத்த விஜயகாந்தின் தே.தி.மு.க.வரை மும்பையில் கிளைகள் இருக்கின்றன.

“பிழைக்கவந்தயிடத்தில் அரசியல் தேவையா ? தேவையெனில் நம்மூர் அரசியல் தேவையா. இல்லை இங்கிருக்கிற ஏதாவது தேசிய அல்லது லோக்கல் கட்சிகளோடு இணைந்துகொண்டு அரசியல் மூலம் தமிழர்களுக்கும், அவரது உடமைகளுக்கும், வளர்ச்சிக்கும் உத்திரவாதம் தரமுடியுமா?” என்று கேட்கிறார் நண்பர் கே.ஆர்.மணி. தேசிய லோக்கல் கட்சிகளோடு இணைவதன் மூலம் தமிழர்கள் தங்கள் உடமைகளுக்கு வேண்டுமானால் உத்திரவாதத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதன் மூலம் சில வளர்ச்சிகளும் சாத்தியப்படும். ஆனால் அவை எல்லாமே மாநில அரசியல் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு ஒரு சில வரையறைக்குள் மட்டுமே செயல்படுத்த முடியும். மாநில அரசியல் கட்சிகள் எல்லா தளங்களிலும் தங்கள் மண்ணின் மைந்தர்களை முன்னுரிமைப் படுத்தும் சூழலில் உளவியல் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு எந்தளவு இடம் கொடுக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும். முனிசிபல் கவுன்சிலர் ஆகலாம். ஆனால் மேயராக முடியாது. நாடாளுமன்ற உறுப்பினராக கூட ஆகலாம். ஆனால் மாநில சட்டசபை உறுப்பினராக முடியாது. இந்தியா வாரிசுகள் இன்று அமெரிக்காவில் செனட் உறுப்பினராக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை அங்கு இந்தியன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லை.

“நான் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஓர் அமெரிக்கன்” என்று தங்கள் அறிமுக உரையை ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்தியா வரும்போது நாம் தான் அவர்களைத் தலையில் வைத்துக்கொண்டு ஆடுகிறோம் என்பதை அண்மையில் பர்க்காதத் ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதியிருந்தார். அப்படி ஒரு தமிழர் நான் மராத்திய மாநிலத்தில் பிறந்து வளர்ந்த மராத்தியன் என்று சொல்லிக்கொள்ள முடியுமா? தமிழ் அறியாமல் வளரும் இன்றைய இளம் தலைமுறை கூட தன்னை அப்படி அடையாளப்படுத்திக் கொள்ள முடியுமா? நானொரு இந்தியன் என்ற அடையாளம் இந்திய மண்ணை விட்டு வெளியில் நிற்கும்போது மட்டுமே ஒவ்வொரு இந்தியனுக்குமான அடையாளமாக இருக்கிறது. இந்திய மண்ணுக்குள்?

“தமிழ் நாட்டைச் சேர்ந்த மாநிலக் கட்சியான தி மு கவின் கொடியும், மராட்டிய மாநிலத்தில் நாதியற்றுக் கிடந்த முஸ்லிம் லீகின் கொடியும் தாராவியில் பறக்கக் கண்ட மராட்டியனுக்கு ஏற்பட்ட எரிச்சலின் வெளிப்பாடுதான் சிவசேனை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் எழுத்தாளர் மலர்மன்னன்.

நான் வரதராஜ முதலியார் பற்றி எழுதும்போதே குறிப்பிட்டேன் சிவசேனைக்கு எதனால் தமிழர்கள் மீது விரோதம் ஏற்பட்டது என்பதை. கடற்கரை ஆதிக்கத்தில் ஆரம்பித்து அதன்பின் தான் கட்சி, அதிகாரம் என்று அவர்கள் வளர்ந்ததும் தங்கள் அரசியல் அவதாரத்திற்கு மண்ணின் மைந்தர்கள் கொள்கையைக் கையில் எடுத்ததும். அன்றும் சரி, இன்றும் சரி தமிழ்நாட்டின் மாநிலக் கட்சிகளின் கொடியோ கூட்டங்களோ சிவசேனையைப் பாதிக்கவே இல்லை. எதிர்காலத்திலும் இந்த தமிழ் மாநிலக் கட்சிகள் தங்கள் அரசியலில் ஓர் அங்குலத்தைக் கூட அசைக்க முடியாது என்பதை சிவசேனையும் சரி, இங்கிருக்கும் மற்ற மாநில அரசியல் தலைவர்களும் சரி ,நன்கு அறிவார்கள். இங்குச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மாநில அரசியல் கட்சிகள் இங்கிருக்கும் மாநில அரசியல் பற்றி பேசுவதே இல்லை. அவர்கள் விவகாரங்களில் தலையிடுவதும் இல்லை. மாநில பிரச்சனைகளைக் கண்டு கொள்வதும் இல்லை. இவர்கள் தமிழ்நாட்டின் அரசியலை இங்கிருந்து கொண்டு பேசிப்பேசி அதில் ஒரு சுகங்கண்டு கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் அரசியல் தலைவர்களை அழைத்து தங்கள் சொந்தப்பணத்தில் விழா எடுத்து தங்கள் இருத்தலை நிச்சயப்படுத்திக் கொள்கிறார்கள். தமிழக அரசியல் கட்சிகளும் தங்களின் கிளை அயல் மாநிலத்தில்,’அதுவும் இந்தியாவின் மாநகரமான மும்பையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று பெருமைப் பட்டுக்கொள்ளலாம். அதைவிடுத்து தமிழகத்து அரசியல் கட்சிகளுக்கு மும்பையில் இருக்கும் தங்கள் கிளைகளை வைத்துக் கொண்டு எவ்விதமான இலாபமும் கிடையாது.

தேர்தல் நேரங்களில் இவர்கள் வழங்கும் தேர்தல் நிதி இன்று தமிழகத்து வட்டங்கள், மாவட்டங்களுக்கு கடலை வாங்கி கொறிக்கிற காசுக்கு கூட ஈடாகாது! தமிழ்நாட்டின் அரசியலை இங்கே நடத்திக்கொண்டிருக்கும் இவர்களுக்கு அதனால் என்ன பயன்? என்ற கேள்வி எழும். எப்போதாவது இவர்கள் சென்னை போனால் அங்கிருக்கும் அவரவர் கட்சி தலைவர்களுக்குப் பொன்னாடைப் போர்த்தி புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்து அதையும் மும்பையிலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகையில் வெளியிட்டு தங்கள் பிறவிப்பயனை அனுபவித்த நிறைவடைவதை தவிர வேறு எந்தப் புண்ணாக்கும் இல்லை.

இன்றுவரை தமிழ்நாட்டின் அரசியலை மும்பையில் வளர்த்துக்கொண்டிருக்கும் இவர்கள் தமிழக அரசியல் தலைவர்களால் எவ்விதமான தனிப்பட்ட பயனையும் /இலாபத்தையும் அனுபவித்தார்கள் என்று சொல்வதற்கில்லை. இதில் தமிழகத்தின் எல்லா கட்சிகளும் அடக்கம். விழிப்புணர்வு இம்மாதிரியான சூழல் தமிழர்களுக்கு மட்டுமல்ல. அயல்மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு மாநிலத்தவருக்கும் இருக்கும் வெவ்வேறு விகிதாச்சரங்களில். மனிதர்கள், அவர்களுக்கான இன அடையாளங்கள், மொழியுரிமை, மொழி வழி வந்த கலாச்சார பண்பாட்டு அடையாளங்கள், அவரவருக்கான கடவுள் நம்பிக்கை இவைகளை தக்கவைத்துக் கொண்டே ஒருவருடன் ஒருவர் இணைந்து வாழ்வது சாத்தியப்படும் , சாத்தியப்பட வேண்டும்.

இந்தக் கருத்துருவாக்கத்தில் அரசியல் வாதிகளை, மதவாதிகளைப் பின்னுக்குத் தள்ளி எழுத்தாளர்களும் இலக்கிய படைப்புலகமும் நிறைய செயல்படுத்தவும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடியும் என்று நம்புகிறேன்.

மும்பை மனிதர்களை தன் படைப்பிலக்கியத்தில் வாழவைத்த எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் சிறுகதை “மொகித்தே’ வை இதுவரை வாசிக்காதவர்கள் தேடி எடுத்து படியுங்கள். ஏற்கனவே வாசித்தவர்கள் இந்தக் கட்டுரையை வாசித்தப்பின் மீண்டும் ஒரு முறை வாசிக்கவும். ரசிகர் மன்றங்கள் ரசிகர் மன்றங்களைப் பற்றி எழுதவில்லை என்றால் மும்பைத் தமிழர்களின் அரசியல் கட்டுரைக்கு முடிவுரை எழுத முடியாது. தமிழ்நாட்டின் திரைப்பட கதாநாயகர்கள் அனைவருக்குமே எங்கள் மும்பையில் ரசிகர் மன்றங்கள் உண்டு. 250க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட ரசிகர் மன்றங்கள் இருப்பதாக மும்பை தமிழ்ப்போஸ்ட் வார இதழ் ஒரு புள்ளிவிவரத்தை வைத்திருந்தது.

மும்பை பாலிவுட் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப்பச்சனுக்கும் ரசிகர்கள் உண்டு தான் என்றாலும் அவர்கள் எல்லாம் நம் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கும் தங்கள் ஹீராவைத் தலையில் வைத்துக் கொண்டாடுவதற்கும் நம் தமிழ் ரசிகர் மன்றங்களிடம் டியூசன் எடுக்க வேண்டும். பிறந்தநாள் என்ன, அதற்கு பத்திரிகைகளில் கொடுக்கும் வாழ்த்துச் செய்திகள் என்ன, அடடா.. ஹீரோக்களின் படம் வந்தவுடன் இவர்கள் நடத்தும் பாலாபிஷேகம் என்ன?.. அசல் தமிழ்நாட்டை அப்படியே நகல் எடுத்தது போல இங்கேயும் காட்சிகள் அரங்கேறும். இப்படி ரசிகர் மன்றங்கள் நடத்துபவர்களுக்கும் அந்தந்த ஹீரோக்களால் எவ்வித பலனும் கிடையாது. ஆனாலும் தங்கள் ஹீரோக்களுக்காக தங்கள் சொற்ப வருமானத்தையும் செலவு செய்துவிட்டு தங்கள் எதிர்காலத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தந்த நடிகர்கள் அரசியல் அவதாரமெடுக்கும்போது இந்த ரசிகர்களும் அரசியல் வாதிகளாகி விடுகிறார்கள். இது தமிழர்களின் சாபக்கேடு.

முடிவுரை மும்பையில் தமிழர்களுக்கான இடம் “பிழைப்பு தேடி” வந்தப் புகலிடமாகவே இருக்கிறது. அமெரிக்காவில் கணினித் துறையில் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள், லண்டனில் மருத்துவத்துறையில் இந்தியர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லிக்கொள்வது போல மும்பையில் தமிழர்களைப் பற்றி என்ன சொல்லிக்கொள்ள முடியும்? மும்பையில் குஜராத்திகள் இல்லை என்றால் இந்த மாநகரத்தின் வணிகம்/தொழில்துறைப் பாதிக்கப்படும். ஆனால் தமிழர்கள் ? தமிழர்கள் பெரும்பாலும் வொய்ட் காலர் வேலைகளிலும் தொழிலாளர்களாகவுமே இருக்கிறார்கள். மும்பைத் தமிழர்கள் என்றால் இவர்கள் மட்டுமல்ல. இவர்கள் கணிசமானவர்கள். சாதனைகள் படைத்தவர்கள் உண்டு. நல்ல பல சமூகச்சேவைகள் ஆற்றிய அமைப்புகள் உண்டு.

Advertisements
This entry was posted in மீள்பதிவு கட்டுரைகள். Bookmark the permalink.

One Response to மும்பைத் தமிழர்களின் அரசியல்… புதியமாதவி, மும்பை

 1. thumbi சொல்கிறார்:

  பதிவில் மும்பை தமிழர்களின் மனநிலை, அணுகுமுறை பற்றி அழகாக சொல்லி இருக்கிறீர்கள். அவர்களை எந்த ஒரு அரசியல் கட்சியும் தம்மவர்களாக எண்ணி பிரச்னைகளை கேட்பதில்லை என குமுறி இருக்கிறீர்கள். அதே சமயம் தமிழக கட்சிகளும் ஒன்றும் செய்ய முனையாது/முடியாது பற்றியும் கூறி உள்ளீர்ர்கள்.

  (ஒரு சின்ன தாவல்: இலங்கையில் தமிழர்களும் ஒரு விதத்தில் இது போன்ற நிலையில் இருந்து இருக்கிறார்கள்; போகப் போக தங்களை இலங்கை குடிமகன்களாக மட்டுமே எண்ணி தமிழக கட்சிகளிடம் இருந்து பெரிதாக எதிர் பார்க்காமல் தம் போரை தாமே நடத்தியிருக்கிறார்கள். இதில் தமிழகமோ இந்தியாவோ ஒன்றும் செய்ய முடியாது என்பதே உண்மை.)

  மும்பையில் உள்ள தமிழர்கள் கால் ஊன்றி, தம்மை தமிழ் பேசும் மும்பைக் காரர்கள் எனக் கருத வேண்டும். ஒரு தலைமுறை அங்கே பிறந்து, அங்கேயே வளர்ந்து உள்ளூர் மொழியை கடை வீதியில் பேசி, தமிழை வீட்டில் பேசி பழகி இருக்கிறார்கள். அவர்களை மண்ணின் மைந்தர்களாகவே அரசு வேலைகளுக்கு கருத வேண்டும்.

  இதில் ஒரு சிரமம் இருக்கும் : அவர்களுக்கு சிறு பான்மையினர், தாழ்த்தப் பட்டவர் என சான்று அளிக்க அவர்கள் பெற்றோர்க்கு தமிழ் நாட்டிலே ஒரு காலத்தில் அளித்த சாதி சான்று இதழை அடிப்படையாக வைத்து அளிக்க தாசில்தார்கள் முன் வர வேண்டும். இந்த விஷயத்தில் உள்ளூர் தமிழர் தலைவர்கள் போராடி தம் உரிமைகளை நிலை நாட்ட வேண்டும்.

  இன்னும் ஒரு தலை முறைக்கு பின்பு, அவர்கள் பொருளாதார நிலையும் உயர்ந்து, சாதி சான்று இதழின் துணை இல்லாமல் இருக்கும் வண்ணம் வாழ்க்கை நிலை உயரும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s