துளிப்பாவும் புதுச்சேரியும்

கடந்த வாரம் புதுச்சேரியில் நடைபெற்ற துளிப்பா ஆய்வரங்கத்திற்கு என் பங்களிப்பாக இந்த கட்டுரையினை அனுப்பியிருந்தேன். துளிப்பா ஆய்வரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை இதோ உங்களுக்காக
=============================================================================================

துளிப்பாவும் புதுச்சேரியும்.

மனித இனம் தோன்றியதுமுதல் வாழ்க்கையின் ஒரு அங்கமாக தொடர்ந்து வருவது இலக்கியம். காலநிலைகளுக்கு ஏற்றார்ப்போல் இலக்கியத்தின் வடிவங்கள் பலதரப்பட்டு வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது ஒவ்வொரு வடிவங்களும் அதனதன் போக்கிற்கு தன்னை உருவாக்குபவர்களை பெரிதாக பேசவைத்திருக்கிறது, இருப்பினும் இலக்கியத்தை தன்போக்கிற்கு வளைத்தும், மக்களைவிட்டு தள்ளிவைத்தும் இவர்தான் அரசவைக்கவிஞர் இவர்தான் பாடவேண்டும் என்கிற ஒருதலை சிந்தனையினை ஏற்படுத்தியும், இலக்கியத்தின் அடர்ந்த பகுதியினை காட்டி உன்னால் இதுப்போல் இலக்கியம் படைக்க முடியாது அல்லது நீ படைப்பதெல்லாம் இலக்கியமே இல்லை என்கிற விதங்களில் இலக்கியத்தையும் தனக்கேற்றார்ப்போல் அடிமைபடுத்தி மக்களை ஏமாற்றி வந்த கால கட்டங்களும் வரலாற்றின் பதிவில் இருக்கிறது.
இலக்கியத்தின் வடிவங்கள் என நமக்கு அறிமுகம் செய்யப்பட்டவைகளில் திருக்குறள் தொடங்கி எண்ணற்ற ‘பா’ வகைகளும் அடங்கும். இவற்றில் அரசர்கள் காலத்தில் அவர்களின்மேல் துதிப்பாடவே பல இலக்கிய வடிவங்கள் பயன்படுத்த்தப்பட்டு வந்தன என்பதையும், அப்படி அரசர்களை துதிப்பாடியே பலர் பஞ்சம் பிழைத்துவந்தனர் என்பதையும் நாம் இதுவரை படித்துவந்த பாடநூற்களில் பதியப்பட்டிருக்கும் பாட்டுகளை வைத்து அறிந்துக்கொண்டோம். இப்படி பட்ட இலக்கியமானது ஒரு கட்டத்தில் மக்களுக்கானது என்கிற பரந்த இடத்தை விட்டு பொருளுக்காக,புகழுக்காக,பதவிக்காக என தவறான வரலாற்று பதிவுகளாகவும் இருப்பதை நாம் அறிவோம்.
இவ்வகை இலக்கியங்களில் கடந்த காலம் வரை நம்மை தொடர்ந்துவந்தவை மரபுக்கவிதை வகைகள்.
இந்த மரபு கவிதைகள் என்பன மக்களிடமிருந்து மக்களுக்காக தோன்றி பின் மெல்ல மெல்ல அரசவை நோக்கி பயப்பட்டு பின் அரசர்களின் துதிப்பாடுவதிலேயே சரணடைந்துவிட்டன எனலாம். ஒரேயொரு ”யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்கிற கனியன் பூங்குன்றனாரின் சொல்லைவைத்துக்கொண்டு காலம் தள்ளிக்கொண்டிருந்த வேலையில் நம் தலைமுறைக்கென கிடைத்த கவிஞர்களில் பாவேந்தர் பாரதிதாசன் போன்றவர்களின் கவிதைகள்தான் மக்களிடையே சென்று சேர்ந்திருக்கிறது எனலாம். இவர்களுக்கு முன்னால் படைக்கப்பட்ட இலக்கியங்களில் பெரும்பான்மையானது வெரும் சந்தங்களையும், இலக்கண வறையரைகளையும் தாண்டி மக்களை சேரவில்லை. எனவே தான் வரலாறாக பதியப்பட்டிருக்கும் இவ்வகை மரபுக்கவிதைகளில் பெரும்பாலும் அரசர்களை  புகழ்வதிலும் அதற்கு அடுத்தார்ப்போல் ஒரு சில ஆதிக்க இனங்களின் வரலாற்று பின்னணியை மட்டும் மையமாகக் கொண்டும் இயங்கி வந்திருக்கிறது என்பது உண்மை.

இதில் குறிப்பாக பல மரபுக்கவிதைகள் சமண, சைவ, வைணவ இலக்கியங்களாக பார்க்கப்பட்டும், பதியப்பட்டும் இருப்பதால் இவை மக்களின் வாழ்வியல் நிலைகளை மாற்ற பயன்படாமல் தான் சார்ந்த இனத்தின் பழக்கவழக்கங்கள் தொடங்கி தாங்கள் வணங்கும் தெய்வங்களை வழிப்படுவதற்கு மட்டுமே பாடபட்டுவந்திருக்கின்றன. இதில் குறிப்பாக குறிவைத்து ஆதிக்க இனங்களால் மக்களிடமிருந்து இலக்கியங்கள் பிரித்துவைக்கப்பட்டு சக மக்களை, பாடுபவர்களாக இல்லாமல் வெரும் பார்வையாளர்கள் என்கிற தூரத்திலேயே நிறுத்தியதோடு அல்லாமல் இன்னும் மக்களின் பெரும் கூட்டத்தினரை கேட்கவே அனுமதிக்காத ஆதிக்கவெறியும் இருந்துவந்ததால் அவ்விலக்கியங்களை நமக்கானது அல்ல என தூக்கியெறியவும் மக்கள் தயங்கவில்லை. இப்படி மக்களைவிட்டு தூர தூரமாக ஒதுக்கியதால் இன்று மரபுக்கவிதை என்கிற வடிவம் மாறி மாறி மக்களே அவற்றை ஒதுக்கியதால் மக்களுக்கான இலக்கியம் தனது ஓடுபாதையை தாண்டி மக்களிடையே புதுக்கவிதைகாக உள்ளே நுழைந்தது எனலாம்.

புதுக்கவிதை தொடங்கிய காலகட்டதில் கவிதைகள் இறைமொழி அதை மாற்றக்கூடாது என ஆதிக்க இனங்களும், இலணக்கம் கெட்டுவிடும் என ஒரு சில இலக்கியவாதிகளும் ஏனோ அந்த வடிவத்தை எதிர்த்தே எழுதியும், பேசியும் வந்தனர். இதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் அப்பட்டமான அபத்தங்களாக இருந்ததன.அப்படி எதிர்த்தவர்களே பின்னாலில் புதுக்கவிதையில் கோலோச்சிய வரலாறும் இருக்கிறது.ஆனால் கவிஞர் மீரா போன்றவர்கள் புதுக்கவிதை வடிவத்தை வளர்த்தடுக்க வெகுவாக பாடுபட்டு அந்த முயற்சியில் வெற்றியும் கண்டார் எனினும் புதுக்கவிதையால் வளர்ந்தவர்களோ தங்களுக்கு இணையாக புதியதாக கவிஞர்கள் வந்துவிடக்கூடாது என்பதில் மிககவனமாக இருந்தார்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும். ஆனால் இப்படி இப்படியான இடையூறுகள் இருந்தாலும் புதுக்கவிதை மக்களிடையே வெகுவாக பரந்து பரந்து சென்றிருக்கிறது. மரபுக்கவிதைகள் விட்ட இடங்களை நிரப்பியதாலும், மக்களுக்கான கவிதை மக்களால் மக்களுக்காக பாடப்பட்டதாலும் புதுக்கவிதை இலகுவாக மக்களிடையே புழக்கத்திற்கு வந்தது. ஏனெனில் புதுக்கவிதைக்கென இலக்கண கட்டுபாடுகள் இல்லை என்பதே இதற்கான நேரடி காரணம் என்பதே உண்மை. இதை முன்வைத்தே நாட்டில் இன்று புதுக்கவிஞர்கள் தொகை மக்கள் தொகையில் பாதியாக இருப்பதாக விளையாட்டாக சொல்லுவதும் உண்டு.இந்த வகையில் புதுக்கவிதையின் தாக்கம் கவிஞர் மு.மேத்தாவின் ”கண்ணீர்ப்பூக்கள்” என்ற தொகுப்பிற்கு பிறகு பட்டித்தொட்டியெல்லாம் பேசப்பட்டு இளைய தலைமுறையில் எண்ணற்றவர்களை புதுக்கவிஞர்களாக்கி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

இனி இன்னொரு வடிவம் வரவேபோவதில்லை என்கிற அளவில் புதுக்கவிதை கோலாச்சிக்கொண்டிருக்க அதன் தலையில் இடி விழுந்ததைப்போல் ஜப்பானியர்களின் ஓசை வடிவமான ஹைக்கூ என்கிற வடிவம் மக்களுக்கு அறிமுகமாகிறது. வழக்கத்தைவிட கூடுதலாக எதிர்ர்புக்குரல் என்பது அறிவுஜீவிகளிடத்திலிருந்து ஹைக்கூ வடிவத்திற்கு வந்தாலும் அத்தனையையும் தூக்கிவிழுங்கி தன் இடத்தை பிடித்துக்கொண்டது ஹைக்கூ. ஹைக்கூவில் புகழ்பெற்ற ஐப்பானிய ஹைக்கூ கவிதையின் முன்னோடிகளாக மட்சுவோ பாஷோ, யோசாபூசன், இசா, ஷிகி என்பர்வர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகளை தொகுத்து தமிழில் கவிஞர் அமரன் ”நால்வர் 400” என்று ஒரு தனி நூலாக வெளியிட்டிருக்கிறார். இருப்பினும் தமிழில் முதல் ஹைக்கூ நூலாக கவிஞர் அறிவுமதியின் ”புல்லின் நுனியில் பனித்துளி” நூல் அறியப்படுகிறது, அந்து நூலுக்கு அணிந்துரை வழங்கிய கவிக்கோ; ஒரு வடிவத்தை தமிழில் கொண்டுவருகையில் அதன் அத்தனை நுண் விடயங்களையும் அப்படியே கொண்டுவர வேண்டுமென்கிற அவசியமில்லை மாறாக அந்த வடிவத்தை உள்வாங்கிக்கொண்டு அதை நமது பண்பாட்டிற்கு தகுந்தாற்ப்போல் தேவையிருப்பின் மாற்றியமைத்துக்கொள்ளலாம், அதேப்போல் ஹைக்கூ கவிதை எழுதுபவர் இதனால் சகலமானவர்களுக்கு என்பதுப்போல் அதன் விளக்கத்தையும் தரவேண்டியதில்லை ஏனெனில் ஹைக்கூ கவிதையில் வாசகனும் ஒரு படைப்பாளியாகிறான் எனவே அவனுக்கும் இடம் ஒதுக்கி ஹைக்கூவின் பொருளை உணரும் வகையில் வாசகனை சிந்திக்கத்தூண்டவேண்டும் என்கிற பொருளில் ஹைக்கூ குறித்து தனது பதிவினைவைக்கிறார். இதே ரீதியில் கவிஞர் பொன்.குமார் தனது ஹைக்கூ பற்றிய கருத்தாக வார்த்தை சிக்கனத்தை கடைப்பிடிப்பதோடு தேவையற்ற வர்ணனைகளை தவிர்க்கவேண்டும் எனவும் முன்வைக்கிறார்.

ஹைக்கூ ஜப்பானிய வடிவம்தானே ஒழிய ஜப்பான் மொழியைவிட தமிழில்தான் இதுவரை அதிகம் ஹைக்கூத்தொடர்பான நூல்கள் வெளிவந்திருப்பாதாகவும். வெளிவந்துக்கொண்டிருப்பதாகவும் நாம் அறியப்படுகிறோம். ஏனெனில் ஹைக்கூ வடிவமானது நம் மக்களின் வாழ்க்கை முறையினை மிகத்தெளிவாகவும். தேவையற்ற வர்ணணைகள் இல்லாமலும். மிகச்சுருக்கமாகவும் சொல்ல தகுந்த வடிவமாக இருப்பதாலும், பாடப்படுகிற பொருள் தனக்கானது அல்லது தன் வாழ்வு நிலைகளை முன்னிருத்துகிறது என்று மக்கள் இலகுவாக ஏற்றுக்கொண்டனர் எனலாம். ஹைக்கூ கவிதைக்குறித்து உலக அளவில் பார்த்தாலும் புதுச்சேர்யில் அதற்கு தனி தன்மை கிடைத்திருக்கிறது எனலாம். இதற்கு வரலாற்று பதிவாக ஒன்றை சொல்லியே ஆகவேண்டும் ஆம் ஹைக்கூ நூல்கள் தமிழ்மொழியில் ஏராளமாக வந்தாலும் அதில் புதுச்சேரியில்தான் அதிகமாக வந்திருக்கிறது ஏனெனில் புதுச்சேரி கவிஞர்களில் ஹைக்கூ பாடாத கவிஞர்களோ ஹைக்கூ பற்றி எழுதாத, ஆய்வு செய்யாத இலக்கியவாதிகளோ இல்லை அப்படி எழுதவில்லை என்றாலே அவர் புதுச்சேரிகார இல்லை என்றும் அடித்து சொல்லலாம். இது கவிதையில் தமிழனனுக்கென்று ஒரு இடம் படைத்துக்கொடுத்த பாவேந்தர் பாரதிசாதனுக்கு அவர்தம் ஊரில் கிடைத்த மிகப்பெரிய சிறப்பாகும். இதைச்சொல்ல காரணியாக இருப்பது கவிதையில் எப்படி மக்களுக்கான கவிதைகளை படைத்து சமூக அவலங்களை தோளுரித்துக்கொடுத்தாரோ அதை அப்படியே தங்களது ஹைக்கூவிலும், ஆய்வுகளிலும் புதுச்சேரிக்கவிஞர்கள் தொடர்ந்துவருவதை காணலாம். இது பேராசிரியர்க்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் அறிவு முதிர்ச்சி என்றால் மிகையாகாது.

புதுச்சேரியில் ஹைக்குவிற்கு “துளிப்பா” என்கிற தமிழாக்க பெயரை செல்லப் பெயராக சூட்டியதோடல்லாமல் துளிப்பா(ஹைக்கூ),நகைத்துளிப்பா(சென்றியு),உரைத்துளிப்பா(ஹைபுன்),ஈறுதொடங்கித் துளிப்பா(ஹைக்கூ அந்தாதி),இயைபுத் துளிப்பா(லிமரிக்கூ) ஆகியன குறித்த ஒருநாள் ஆய்வரங்கு புதுச்சேரியிலிருந்து வெளிவரும் “கரந்தடி” இதழ் சார்பாக 11.10.2009 அன்று நடைபெறுவது மேலும் துளிப்பா கவிஞர்களை வளர்த்தெடுக்கவும் ஏற்கனவே எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு மேலும் துளிப்பா பற்றி அறிந்துக்கொள்ள நல் வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது. இப்படியொரு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்து துளிப்பாவிற்காக தொடர்ந்து பல விதங்களிலும் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்திவரும் புதுவைப் பாவலர் சீனு.தமிழ்மணி அவர்களுக்கும் கரந்தடி சார்பாக ஆய்வரங்கம் நடத்தும் குழுவினருக்கும் அமீரகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவை (துபாய்)சார்பாக வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழமையோடு…

கவிமதி
(செயலளர்: அமீரகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவை)
மின்னஞ்சல்:kavimathy@gmail.com

Advertisements
This entry was posted in கட்டுரைகள் and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s